’வந்தே பாரத்’ ரயிலில் பயணித்த நபர்; உணவில் கிடந்த பொருளால் அதிர்ச்சி

கர்நாடகா மாநிலம், மைசூரிலிருந்து சென்னைக்கு வந்த ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிக்குக் கொடுக்கப்பட்ட உணவில் ’பசை குப்பி’ கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, கொளத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர் டி.சேகர் மைசூரிலிருந்து வந்தே பாரத் ரயிலின் மூலமாகச் சென்னைக்குத் திரும்பினார்.   

அப்போது, அவருக்கு ரயிலில் வழங்கப்பட்ட உணவில் ஓட்டும் பசை குப்பி (பெவி குவிக் குப்பி) இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு, இது குறித்து சம்பந்தப்பட்ட பயணிகள் ரயில் உணவாக மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். மேலும், அந்த புகாரில், ’உணவு ஒப்பந்தத்தாரின் இந்த அலட்சியமான செயலால், தனக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, ஐஆர்சிடிசி பிரிவு அலுவலர் இது குறித்து பயணியிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும், இது சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 

Source link