சென்னை : 'பாலியல் வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டவரின் மனைவிக்கு, திருப்பரங்குன்றம் தொகுதியில் 'சீட்'

சென்னை : ‘பாலியல் வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டவரின் மனைவிக்கு, திருப்பரங்குன்றம் தொகுதியில் ‘சீட்’ கொடுக்கக்கூடாது’ என, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தொகுதியில், கடந்த 1996 தேர்தலுக்கு பின், தி.மு.க., நேரடியாக வெற்றி பெறவில்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், அரசின் நடவடிக்கையால், தி.மு.க.,வுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில், மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான கிருத்திகா பங்கேற்றுள்ளார். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத கிருத்திகாவை, மாவட்டச் செயலர் மணிமாறன் பரிந்துரை செய்து உள்ளார்.

ஆனால், கிருத்திகாவின் கணவரும், திருமங்கலம் ஒன்றிய தி.மு.க., செயலருமான தங்கபாண்டி, கடந்த 2006ல், ஒரு சிறுமியை வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், 2016ல் திருமங்கலம் நீதிமன்றத்தால், 10 ஆண்டு சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டவர்.

இந்நிலையில், முருகனின் படை வீடான திருப்பரங்குன்றத்தில், இதுபோன்ற குடும்ப பின்னணி உள்ள வேட்பாளரை நிறுத்தினால், அதை வைத்தே, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து, தி.மு.க.,வை தோல்வியடைய வைத்துவிடும்.

இது, மதுரை மாவட்ட தொகுதிகளிலும் எதிரொலிக்கும். எனவே, தகுதியான வேட்பாளரை நிறுத்துமாறு, தி.மு.க., தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link