புதுடில்லி: வினாத்தாள் கசிவைத் தடுக்க வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய மசோதா அறிமுகப்படுத்தியிருப்பதால், பார்லியை சுமூகமாக நடத்த அனுமதிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பார்லியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வரும் நிலையில், அவர் கூறியிருப்பதாவது; நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களின் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, வினாத்தாள் கசிவு மற்றும் அது தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, மத்திய அரசு மிகவும் முக்கியமான மசோதா ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், காங்கிரசும் சில எதிர்க்கட்சிகளும் விவாதத்திற்கு அனுமதிக்க மறுத்து, கோஷங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் அவை நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைத்து வருகின்றன.
நாட்டின் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமாறு காங்கிரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தேர்வு முறையை சீரமைப்பதற்காக பிரதமர் மோடி, ஒரு சீர்திருத்தக் குழுவை அமைத்துள்ளர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவானது, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்க வழிவகை செய்கிறது. இந்த விஷயத்தில் கூட எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு அனுமதிக்காவிட்டால், அது தவறான கண்ணோட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.
