கடந்த மாதம் முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள், கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி செல்ல முயன்றனர்.
அப்போது, அந்த பேரணியைத் தடுத்து, இளைஞர்களை அங்கிருந்து கலைக்கும் விதமாக காவல்துறையினர் போராட்டத்தில் இருந்த இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினர். அதாவது, தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசுதல் மற்றும் பெல்லட் குண்டுகளைக் கொண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, இது சம்பந்தமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “ கடந்த ஜூலை 20ம் தேதி டெல்லியில் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலுக்குப் பதில் அளிக்க வலியுறுத்தி இந்த கடிதத்தை எழுதுகிறேன். நியாயமான, பொறுப்புள்ள கல்வி முறையை எங்கள் மாணவர்கள் கோரி வந்தனர்.
ஆனால், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்பதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் உயிரைப் பறிக்கக் கூடிய ஆயுதங்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளனர். மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பெண்களின் பிறப்புறுப்புகளைக் குறிவைத்துப் பாதுகாப்புப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதே போல, உயிரைப் பறிக்கக் கூடிய பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், பத்திரிகையாளர் ஒருவர் உட்பட பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருப்பது ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் மூலம் தெளிவாகத் தெரியவருகிறது. பெல்லட் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானதால் 19 வயது மாணவர் சாஹில் லோச்சாப் ஒரு கண்ணை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.
நான் அவரை சந்தித்தேன். டெல்லியில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்புப் படையினர் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். எனவே தான் உங்களைக் கேட்கிறேன், உள்துறை அமைச்சர் என்ற முறையில், மாணவர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட உயிரைப் பறிக்கக் கூடிய பலபிரயோகத்தைப் பயன்படுத்த நீங்கள் அனுமதித்தீர்களா? இல்லையென்றால், யார் அனுமதித்தது? சீருடை இல்லாமல், சாதாரண உடையில் மாணவர்களைத் தடிகளால் தாக்கும் நபர்கள் காவல்துறையினரா? அல்லது தன்னார்வலர்களா? அவர்களை அங்கு பணியமர்த்தியது யார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
