நமது நிருபர்
தென் கொரிய கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பற்றிய சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மாயமான 4 பேரை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர்.
நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் மாயமான 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தீ பற்றிய போது, தொழிற்சாலையில் பணியில் தொழிலாளர்கள் 170 பேர் இருந்தனர் என தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் 59 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீ பற்றியதற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை.
கட்டடம் இடிந்து விழும் அபாயம் இருந்ததால், தீயணைப்பு வீரர்களால் உடனடியாகத் தொழிற்சாலைக்குள் நுழைய முடியவில்லை. இதுவே பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
