சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, 2022-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் சேவைத் தேர்வுகள் வாரியம் நடத்திய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் ஏன் பேசவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு உடனடி பதிலடி கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தேர்வுகளில் குளறுபடிகள் நடந்தது உண்மைதான்; ஆனால், அந்த சமயத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மத்திய அரசின் (ஜனாதிபதி) ஆட்சியின் கீழ் இருந்தது எனத் தெளிவுபடுத்தினார். மேலும், இந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் அறிக்கை என்னவானது என்றே தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர், நிதித்துறையில் கணக்கு உதவியாளர் (Account Assistant) மற்றும் ஜல் சக்தி துறையில் ஜூனியர் இன்ஜினியர் (Civil) ஆகிய பணியிடங்களுக்கு ஆஃப்லைன் (Offline) முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் (1,200): 1.13 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கு (972) சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு (163) 20,868 பேர் எழுதினர். தேர்வுகள் முடிந்த உடனேயே, குறிப்பிட்ட ஒரு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அளவுக்கு அதிகமாகத் தேர்வானதாகக் கூறி முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் இந்தத் தேர்வுகளை ரத்து செய்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அதன்பின், கணினி வழியிலான தேர்வுகளை நடத்த ‘ஆப்டெக் லிமிடெட்’ (Aptech Limited) என்ற நிறுவனம் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இந்நிறுவனத்தின் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளதாகவும், டெண்டர் நடைமுறையில் விதிகளை மீறி முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி வாசிம் சாதிக் நர்கல் உத்தரவு (டிச.8, 2022) எஸ்.எஸ்.பி. வாரியத்தின் செயல்பாடு நம்பிக்கையளிப்பதாக இல்லை எனக் கூறி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். அமர்வின் இடைக்காலத் தடை (டிச.9, 2022) ஆனால், அடுத்தடுத்த நாளிலேயே உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. தடைக்கு மத்தியிலும், ‘ஆப்டெக்’ நிறுவனம் மூலம் காவல்துறை மற்றும் ஜூனியர் இன்ஜினியர் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. (கணக்கு உதவியாளர் தேர்வு ஜனவரி 2024-ல் தான் நடைபெற்றது).
பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், ஏப்ரல் 2023-ல் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் மறுஆய்வுக் குழுவை அமைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அன்றைய கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜ்குமார் கோயல் தலைமையில் இந்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. மறுஆய்வுக் குழுவின் அறிக்கையில் கண்டறியப்பட்ட 4 முக்கியக் குளறுபடிகள்;
ஆப்டெக் நிறுவனம் தன் மீது எந்த வழக்கோ, விசாரணையோ நிலுவையில் இல்லை எனச் சான்றிதழ் அளிப்பதற்கு பதிலாக, எனக்கு தெரிந்த வரை இல்லை (to the best of my knowledge) எனக் கூறி நிபந்தனைக்கு உட்பட்டுப் பத்திரம் தாக்கல் செய்தது. கொள்முதல் குழு (Purchase Committee) நிறுவனத்தின் தகுதி நிபந்தனைகளை தளர்த்தி, நியாயமான போட்டி போக்கை பாதித்தது. டெண்டர் நிபந்தனைகளின் பிரிவு-16 கடுமையாக மீறப்பட்டிருந்தது; இதன்படி அந்த ஒப்பந்தமே உடனடியாக ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். நிறுவனத்தின் குறைந்தபட்ச ஆண்டு விற்றுமுதல் (Turnover) வரம்பு ரூ.20 கோடியிலிருந்து, தகுந்த காரணங்களின்றியே ரூ.10 கோடியாகக் குறைக்கப்பட்டது.
ஆக.31, 2023 அன்று நிலவரப்படி, உயர் நீதிமன்ற நீதிபதி மொக்ஷா கஜூரியா காஸ்மி, மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். செப்.2023-ல் சட்டத்துறையும் இதற்கான நடவடிக்கைக் குறிப்புகளை வழங்கியது. இருப்பினும், இந்த மறுஆய்வுக் குழுவின் அறிக்கையும் பரிந்துரைகளும் காகித அளவிலேயே எஞ்சின; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து, 3 தேர்வுகளுக்கான முடிவுகளும் நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலத்தில் கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டன.
ஆப்டெக் (Aptech Ltd) நிறுவனம் அந்த விவகாரம் இப்போது முடிந்துவிட்ட ஒன்று எனத் தெரிவித்துள்ளது. மறுஆய்வுக் குழுவின் அறிக்கை பரிசீலனைக்காக ‘சேவைத் தேர்வுகள் வாரியத்திற்கு’ (SSB) அனுப்பப்பட்டது. அது ஒரு தன்னாட்சி அமைப்பு; வழக்கமான அரசுத் துறை போல இயங்குவது இல்லை என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மறுபுறம், பின்வாசல் வழியாக அரசு வேலைக்கு ஆட்களை எடுக்கும் பழைய முறையை ஒழித்து, வெளிப்படையான தேர்வை நடத்தவே அரசு முயற்சித்தது என்றும் மற்ற சில வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
