சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில், தேஜ கூட்டணியில் தங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆகியோரிடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திராவிட மாடல் ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி- சார்பில் தமிழகம் மீட்பு மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதி ஹிந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்து 5 சட்டசபை தொகுதிகளில் தனிச் சின்னம் அல்லது இரட்டை இலை, தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கோர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில், தேஜ கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆகியோரிடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்து மக்கள் கட்சி பல ஆண்டுகளாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக உறுதியான சித்தாந்த மற்றும் அமைப்பு ரீதியான ஆதரவாளராக இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் தேசியவாத மற்றும் கலாசார விழுமியங்களை வலுப்படுத்த, அடிமட்ட அளவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
இந்து சமூகம், மத உரிமைகள் மற்றும் நாகரிக விழுமியங்கள் தொடர்பான முக்கியப் பிரச்னைகளில் பொதுமக்களின் கருத்தைத் திரட்டுவதில் எங்கள் கட்சி தீவிரமாகப் பங்களித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாஜ மற்றும் அதிமுக தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
