தான்தோன்றித் தனமாக, அடாவடியாக, பின் விளைவுகளைப் பற்றி கவலை இல்லாமல் அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரான் மீது போர் தொடுத்தபோது, கச்சா எண்ணெய் விலை கவலைக்கிடமான அளவுக்கு உயர்ந்தன.
அசாதாரணமான போர்ச் சூழல்இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, 2022ல் ஏற்பட்ட விலை உயர்வான ஒரு பேரலுக்கு 128 டாலர் என்ற அளவையோ அல்லது 2008ஆம் ஆண்டின் பெரும் பொருளாதார மந்த நிலைக்கு சற்று முன்பு இருந்த, ஒரு பேரலுக்கு 146 டாலர் என்ற வரலாறு காணாத விலை உயர்வையோ தற்போது கச்சா எண்ணெய் விலை நெருங்கவில்லை. ஆனால், மத்திய கிழக்கில் மீண்டும் அசாதாரணமான போர்ச் சூழல் உருவாகி உள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர்களை தாண்டி விட்டது. அதேசமயம், மேலும் மேலும் பதற்றம் அதிகரிப்பது, எண்ணெய் விலையை 150 டாலர் என்ற புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லக் கூடும்.
ஒரு மாற்று வழி…மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமையன்று 100 டாலரைத் தாண்டியது. அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் போரில் இறங்கி உள்ளன என்பதைத் தாண்டி, இதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தாப் நீரிணையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முடக்கி உள்ளது, முதல் காரணம். ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலால், அந்த முக்கிய நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் பெரும்பாலான கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது. எனவே, கச்சா எண்ணெய் சந்தையானது ஒரு மாற்று வழியைக் கையாண்டது.
மற்றொரு வழியிலும் தடை வழக்கமாக, பாரசீக வளைகுடா வழியாகச் செல்ல வேண்டிய சுமார் 70 லட்சம் பேரல் எண்ணெய், குழாய் மூலம் செங்கடலுக்கு அனுப்பப்பட்டு, உலகச் சந்தைக்கு விநியோகம் நடைபெற்றது. தற்போது, அந்த குழாய்வழி மாற்று பாதைகளும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. பாப்-அல்-மந்தாப் நீரிணையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டு உள்ளனர். எனவே, நாள் ஒன்றுக்குச் சுமார் 50 லட்சம் பேரல் சவூதி கச்சா எண்ணெய் வெளியேறுவதற்கான மற்றொரு வழியும் தடைபட்டுள்ளது.

எட்டு வார பயணம்…சவூதி அரேபியா, கச்சா எண்ணெயை சூயஸ் கால்வாய் வழியாக வடக்கு நோக்கித் திருப்பிவிட முடியும். ஆனால், சூயஸ் கால்வாயின் ஆழம் குறைவு என்பதால், மிகப்பெரிய, முழுமையாக கச்சா ஏற்றப்பட்ட எண்ணெய் கப்பல்களால் அந்த வழியில் செல்ல முடியாது. ஒருவேளை எண்ணெய் சிறிய கப்பல்களில் ஏற்றப்பட்டாலும், மத்திய தரைக்கடல் வழியாகவும் ஆப்பிரிக்காவைச் சுற்றியும் செல்வது, வழக்கமான நான்கு வாரப் பயணத்தை எட்டு வாரப் பயணமாக மாற்றிவிடும் .
காப்பீடு கிடைக்குமா?கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் இருப்பதற்கு இரண்டாவது காரணம், சரக்கு கப்பல்களுக்கான காப்பீட்டு நெருக்கடி. போரின் போது ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல்கள் அதிக காப்பீட்டுக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், பாதிப்பு ஏற்பட்டபோது காப்பீட்டுத் தொகையை உத்தரவாதமாகப் பெற முடிந்தது. ஆனால், தற்போது ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறும் கப்பல்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பெற முடியுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு ஈரான் மட்டுமல்ல அமெரிக்காவின் மோசமான பிடிவாதமும் காரணம்.

எரியும் நெருப்பில்…ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் ஒவ்வொரு பேரல் எண்ணெய்க்கும் 1 முதல் 2 டாலர் வரை சுங்கக் கட்டணத்தை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஈரான் கூறி உள்ளது. எனவே, ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பலும் மில்லியன் கணக்கான டாலர்களை ஈரான் ஆட்சியாளர்களுக்கு செலுத்த வேண்டும். அதேசமயம் ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு எதிரானது என்பதால் அத்தகைய கப்பல்களின் இன்சூரன்ஸ் பாலிசி செல்லாததாக்கி விடும். சரி கட்டணம் செலுத்தாமலேயே ஹோர்முஸ் நீரிணையை கடக்கலாம் என முயற்சிக்கும் கப்பல்களை ஈரான் தாக்கும். இத்தகைய எரியும் நெருப்பில் உக்ரைனும் சேர்ந்து எண்ணெய் ஊற்றியுள்ளது என்பதுதான் மூன்றாவது காரணம்.
டீசல் வரத்து முடக்கம் கருங்கடலில் (Black Sea) உள்ள ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும், காஸ்பியன் குழாய்வழி கூட்டமைப்பு (Caspian Pipeline Consortium) கச்சா எண்ணெய் முனையத்தின் மீதும் அண்மையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் ரஷ்யாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, அந்நாடு டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. இதனால் சந்தைக்கு வரவேண்டிய டீசல் பெருமளவு குறைந்தது. இந்த தடைக்கு முன்பு, ரஷ்யா நாள் ஒன்றுக்கு 8 லட்சம் பேரல் டீசலை ஏற்றுமதி செய்து வந்தது. இது உலகின் டீசல் ஏற்றுமதியில் 12% ஆகும். ஆக 12 சதவீத டீசல் வரத்து முடங்கிவிட்டது.

விநியோக வழிகள் மூடல்உக்ரைனின் கருங்கடல் தாக்குதல், மிகவும் மோசமான நேரத்தில் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதித்து உள்ளன. உலகச் சந்தைக்கு அதிக அளவு கச்சா எண்ணெய் காஸ்பியன் குழாய்வழி வருவதில்லை. ஆனால், ஹோர்முஸ் நீரிணை வழியாக வரும் லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் விநியோக வழிகள் மூடப்பட்டுள்ள வேளையில், இந்த தாக்குதல் நிகழ்ந்து உள்ளது. எனவே உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு நாள்தோறும் வர வேண்டிய 17 லட்சம் பேரல்களும் வராமல் போய்விட்டன.
இருப்பு கரைந்தது…நான்காவது காரணம், ஈரான் போரின் தொடக்கத்தில் இருந்த நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் இடையில் மிக அடிப்படையான வேறுபாடு உள்ளது. போருக்கு முன்பு உலகளாவிய சேமிப்பில் இருந்த கச்சா எண்ணெய் அளவு வரலாற்று உச்சத்தில் இருந்தது. இதில் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப்பட்டு கடந்த ஐந்து மாதங்களில் 1.3 பில்லியன் பேரல் செலவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, கடந்த ஜூன் மாதம், குறுகிய கால போர்நிறுத்த ஒப்பந்தத்தின் போது 20 கோடி பேரல்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறியது. தற்போது அதற்கும் வாய்ப்பில்லை.

சீனாவின் தந்திரம் ஐந்தாவது காரணம், கடந்த ஐந்து மாதங்களில் ஒருபுறம் கச்சா எண்ணெய் சப்ளை சரிந்தாலும், மறுபுறம் அதற்கேற்ப தேவையும் சரிந்தது. தேவை சரிந்ததற்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான சீனாவின் தொலைநோக்குப் பார்வை முக்கிய காரணம். அதிக விலையில் அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என முன்னுணர்ந்து, போருக்கு முன்பே சீனா எண்ணெயைச் சேமித்து வைத்திருந்தது. ஆனால், சீனா இனி கையிருப்புகளை இந்த அளவிற்கு நம்பியிருக்க முடியாது.

எண்ணெய் விலை… இந்த 5 காரணங்கள், கச்சா எண்ணெய் சந்தை சீர்குலைவுக்கு ஒரு காலக்கெடுவை விதித்துள்ளன. ஆகவே தற்போது, எண்ணெய் சந்தை, காலக்கெடுவுக்கு எதிரான ஒரு ஓட்டப் பந்தயத்தில் உள்ளது. எனவே, கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ள போதிலும் ஒப்பீட்டளவில் கட்டுக்குள் இருப்பதாகவே அர்த்தம். ஆனால், இதே நிலை தொடர்ந்தால் விலைகள் தொடர்ந்து உயரும். அக்டோபர் மாதத்திற்குள் ஒரு பேரல் எண்ணெய் விலை, 2022ஆம் ஆண்டின் உச்சபட்ச விலையான 120 டாலரைத் தாண்டக்கூடும். மத்திய கிழக்கு தழுவிய ஒரு முழுமையான போர் வெடித்தால், ஒரு பேரல் எண்ணெய் விலை 150 டாலருக்கும் மேல் ஒரு புதிய சாதனை அளவை எட்டக்கூடும். ஆனால், நமக்கு மிகப்பெரிய வேதனை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
