நடிகர் தனுஷ், தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மட்டுமன்றி, இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் ரசிகர்கள் இடையே கொண்டாடப்பட்டு வருகிறார்.
2002-ல் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஒல்லியாக அப்பாவி முகத்துடன் தோற்றத்தில் ஹீரோவுக்கான இலக்கணத்தை மாற்றி எழுதியவர் தனுஷ். ஆனால் இளமைத்துள்ளல் நிறைந்த இயல்பான நடிப்பிலும் அயராத முயற்சியாலும் சமூக நலன் சார்ந்த கதைகளுடன் அனைவருக்கும் பிடித்தமானவரானார். குறிப்பாக இளைய தலைமுறையினர் இவரை வரவேற்று இவருக்கான இடத்தை அளித்து மகிழ்ந்தனர்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, அசுரன், கர்ணன், ராயன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள தனுஷ் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் மற்றும் பின்னணிப் பாடகராகவும் பன்முகக்கலைஞராக தற்போது வலம் வருகிறார். மேலும் தனது திறமையினால் இந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இவரது தன்னம்பிக்கை பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது எனலாம்.
