இந்தியாவில் இருந்து நேபாளத்திற்குச் சுற்றுலா அல்லது வணிக ரீதியாகப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு வந்துள்ளது. இந்திய மற்றும் நேபாள குடிமக்கள் ரூ. 25,000 வரை இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாளத்திற்குள் எடுத்துச் செல்லவும், அங்கிருந்து திரும்பக் கொண்டுவரவும் நேபாள அரசு அனுமதி அளித்துள்ளது. நேபாளத்தின் மத்திய வங்கியான ‘நேபாள ராஷ்டிர வங்கி’ (Nepal Rastra Bank – NRB) இது குறித்த புதிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இனி ஜப்பான்ல சும்மாலாம் செட்டில் ஆக முடியாது… 30 வருஷ கணக்கு வேணும்; இந்தியர்கள் தலையில் விழுந்த பெரிய இடி
எந்தெந்த ரூபாய் நோட்டுகளுக்கு அனுமதி?
2016-ஆம் ஆண்டு நவம்பர் 9-க்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட புதிய ரூ.200 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகளுக்கு மட்டுமே இந்த அனுமதி பொருந்தும்.
பண மதிப்பிழப்பிற்கு முன் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் நேபாளத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துச் செல்லவோ பயன்படுத்தவோ முடியாது.
முக்கிய விதிகள் மற்றும் நிபந்தனைகள்
நேபாள குடிமக்கள் அல்லது இந்தியர்கள், இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குச் செல்லும்போது மட்டுமே இந்த இந்திய பணத்தைக் கொண்டு வர முடியும். மூன்றாம் கட்ட ஏதேனும் ஒரு நாட்டிலிருந்து நேபாளத்திற்கு இந்திய ரூபாயைக் கொண்டு வரக் கூடாது. அதேபோல நேபாளத்திலிருந்து வேறு எந்த நாட்டிற்கும் இந்திய ரூபாயைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இந்தப் பணப் பரிமாற்றம் இந்தியா – நேபாளம் எல்லைக்கு இடையே மட்டுமே செல்லுபடியாகும்.
இதனால் என்ன பலன்?
இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையே திறந்தவெளி எல்லைப் பகுதி இருப்பதால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நேபாளத்திற்குச் சென்று வருகின்றனர். அதேபோல் ஏராளமான நேபாள மக்கள் இந்தியாவில் பணிபுரிந்தும், படித்தும் வருகின்றனர். நேபாள அரசின் இந்த முடிவால் சுற்றுலாத் துறை பெரிதும் வளர்ச்சியடையும் என்றும், இரு நாட்டு மக்களிடையே வணிகம் மற்றும் பயணச் செலவுகள் மிகவும் எளிதாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
