‘கரூர் அரசு பணி ரத்து’-உச்சநீதிமன்றத்தை நாடும் தவெக அரசு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய அரசின் ஆணையை உயர் நீதிமன்ற மதுரைக்  கிளை தற்பொழுது ரத்து செய்துள்ளது. அண்மையில் கரூர் சென்ற தமிழக முதல்வர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கி இருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி முகமது ரஷீத் மற்றும் திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட அரசு பணி என்ற முடிவு ஏற்கத்தக்கதல்ல, அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று (27/07/2026) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ‘லட்சக்கணக்கான இளைஞர்கள் இதுபோல படித்துவிட்டு அரசு பணிக்காக காத்திருக்கிறார்கள். சுமார் 39 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 20 லட்சம் பேர் ஒவ்வொரு தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த சூழலில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு பணி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. காவல்துறை முறையாக கூட்டத்தை கையாளவில்லை என குற்றமும் சுமத்தப்பட்டாலும் அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் கண்காணிப்பிலேயே விசாரணை நடைபெற்ற வருகிறது” என வாதத்தை வைத்தனர்.

இதனை அடுத்து நீதிபதிகள் சிறிது நேரம் வழக்கை ஒத்தி வைத்திருந்தனர். பின்னர் நீதிபதிகள் வாசித்த உத்தரவில் ”கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவது எதிர்த்து பல பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் அரசு பணி ஆணை வழங்கும் விழாவானது தற்காலிக அடிப்படையில் பணி வழங்கப்பட வேண்டும், முதல் மாதம் ஊதியம் பெறுவதற்கு முன்பாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு முடிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கு உதவும் வகையில் மனுதாரர், அரசு தரப்பு என அனைத்து தரப்பிலும் வாதங்களையும் முன்வைத்த வழக்கறிஞர்களுக்கு இந்த நீதிமன்றம் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது. அதேபோல் இந்த வழக்கு ஒரு சர்வீஸ் வழக்கல்ல, கருணை அடிப்படையில் பணி வழங்கிய உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. பொதுநல வழக்காக விசாரணைக்கு இந்த வழக்கு உகந்ததா என்ற வாதம் எழுந்தது. ஒரு நீதிமன்றம் இயல்பாக அரசு வழங்கும் நிவாரணங்களை கூறலாம். அதோடு இந்த விவகாரம் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வின் வரம்பிற்கு உட்பட்டது. எனவே இதனை பொதுநல வழக்காக விசாரிக்க அதிகாரம் உள்ளது.

சில வழக்குகளை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய இயலாது என உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளை வழங்கியுள்ளது. அந்த வழக்குகள் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட அரசு பணியை எதிர்த்த வழக்குகள். இந்த வழக்கை பொறுத்தவரை முற்றிலும் வேறு. கருணைப்படி பணி வழங்கும் பொழுது ஏற்கனவே கருணை பணி வழங்குவதில் பட்டியல் உள்ளது. அவற்றினை முறைப்படி பரிசீலித்து அதன் பின்னர்தான் பணி நிரந்தரம் செய்வார்கள். அரசு பேருந்து விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கினால், அல்லது அவர்கள் அரசு பணி கேட்டால் இவ்வாறு வழங்க முடியுமா?

சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்துக்கள் நடக்கிறது. அவர்களும் அரசு பணி வேண்டும் எனக்கோரினால் என்ன செய்வது? எனவே அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க இயலாது.  ஒருவேளை திறன் வளர் பயிற்சிகள் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உதவலாமே?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ‘கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்ட அரசு வேலைக்கான பணி ஆணையை ரத்து’ செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தமிழக அரசு, மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாளை காலையே இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link