-டில்லி சிறப்பு நிருபர்-
கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உள்ள இணைப்பு விதியை தவறாகப் பயன்படுத்தி, மக்கள் தீர்ப்பை மாற்றி அமைக்கும் போக்கு அதிகரித்து வருவதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, மத்திய அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின் கீழ், ‘கட்சிகள் இணைப்பு’ என்ற பெயரில் நடக்கும் கட்சித் தாவல்களை எதிர்த்து மூத்த வழக்கறிஞரும், சுயேச்சை ராஜ்யபா எம்.பி.,யுமான கபில் சிபல், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘அரசியலமைப்பின், 10-வது அட்டவணையில் ஏராளமான சிக்கல்கள் இருப்பதை நாங்கள் காண்கிறோம். ஆனால், இச்சட்டத்தை உருவாக்கியது எம்.பி.,க்கள் தான். எனவே, இத்தகைய பிரச்னைகளை பார்லிமென்ட்டில் எழுப்புவது தான் பொருத்தமானது’ என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் கபில் சிபல், ”நீதிபதிகளைப் போலவே பார்லிமென்ட் உறுப்பினர்களும் சில நேரங்களில் தவறு செய்யக்கூடும். அதிகாரத்தில் இருப்போர், தங்களுக்கு சாதகமாக இருக்கும் சட்டத்தை ஒருபோதும் மாற்ற மாட்டார்கள். இரண்டில் மூன்று பங்கு உறுப்பினர்கள் பிரிந்து சென்று மற்றொரு கட்சியுடன் இணைவதை அனுமதிக்கும் இந்த சட்டம், தேர்தல் மூலம் மக்கள் அளித்த பெரும்பான்மைத் தீர்ப்பைச் சிறுபான்மையாகவும், சிறுபான்மையை பெரும்பான்மையாகவும் மாற்றி ஜனநாயகத்தைச் சீர்குலைக்கிறது,” என, தெரிவித்தார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘நாட்டின் அரசியலமைப்பில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
