கரூர் நெரிசல் சம்பவம்; த.வெ.க அரசு வழங்கிய அரசுப் பணி ரத்து: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

கரூரில் கடந்த ஆண்டு  நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு வழங்கிய அரசு வேலை நியமன ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. சி.பி.ஐ விசாரணை நிலுவையில் உள்ள சூழலில், விதிகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்ட இந்த பணி நியமனங்கள் சட்டப்படி செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துச் சி.பி.ஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், அண்மையில் ஜூலை மாத தொடக்கத்தில் கரூர் சென்ற முதல்வர் விஜய், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 32 பேருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிலையில், அரசியல் கூட்டங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதற்கு 2020 அரசாணையில் எவ்வித விதிகளும் இல்லை என்றும், வழக்கு விசாரணையில் உள்ள சூழலில் அரசுப் பணி வழங்குவது சாட்சிகளைப் பிறழ் சாட்சிகளாக மாற்ற வழிவகுக்கும் என்றும் கூறி, சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பிரபாகரன், நாம் தமிழகர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கிளிட்டஸ் மற்றும் அரசு வேலைக்கு படித்து வரும் ஒருவர் என 3 பேர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அ

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், த.வெ.க அரசின் இந்த நடவடிக்கை அரசாணை விதிமுறைகளுக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் எதிரானது எனச் சுட்டிக்காட்டி பணி நியமன ஆணைகளை ரத்து செய்தது. மேலும், “கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி ஏன் சுய தொழில் முனைவராக மாற்றக்கூடாது? கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணிவாய்ப்பு வழங்கியதால், சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கப்படுமா?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு த.வெ.க அரசு சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் வழங்கப்பட்ட அரசு வேலை வாய்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு த.வெ.க அரசிற்கு மிகப்பெரிய சட்ட ரீதியான பின்னடைவாகப் பார்க்கப்படுவதுடன், தமிழக அரசியல் களத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல். 

Source link