பிரதமர் குறித்து அவதூறான கருத்துக்கள்; சமூக ஊடகங்களில் பதிவுகளை நீக்குமாறு உத்தரவு

புதுடில்லி: டில்லியில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்திய போது, பிரதமர் நரேந்திர மோடி குறித்து சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய மற்றும் அவதுாறாக வெளியிட்ட பதிவுகள் குறித்து நடவடிக்கை எடுப்பது பற்றி, டில்லி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ உட்பட போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், டில்லி, ஜந்தர் மந்தரில், ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தினர்.

அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான், கடந்த 25ம் தேதி மாலையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை வாபஸ் பெற்று, ஜந்தர் மந்தரில் இருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில், போராட்டம் நடந்த ஒரு மாத காலத்திலும், சமூக ஊடகங்களில் பிரதமர் நரேந்திர மோடி, கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் மற்றும் பா.ஜ., தலைவர்களை விமர்சனம் செய்து ஆயிரக்கணக்கான பதிவுகள் வெளியிடப்பட்டன.

அவற்றில் ஆட்சேபனைக்குரிய மற்றும் அவதுாறான பதிவுகளை நீக்கும்படி போலீசார் அறிவுத்தி இருந்தனர். இந்நிலையில், சமூக ஊடங்களில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய மற்றும் அவதுாறான பதிவுகள் வெளியிட்டோர் மீது, நடவடிக்கை எடுப்பது குறித்து, டில்லி மாநகர போலீஸ் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். சமூக ஊடங்கங்களை டில்லி மாநகரப் போலீசின் சிறப்புப் பிரிவினர் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு எதிரான புண்படுத்தும் மற்றும் இழிவான கருத்துக்களைக் கொண்ட பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்குமாறு அந்தத் தளங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, பிரதமர் தாயார் குறித்தும், கேவலமான அருவருக்கத்தக்க சொற்களை பயன்படுத்தி சமூக விரோதிகள் இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு விமர்சித்து இருந்தனர்.

மாணவர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகள், மதவெறியர்கள், இந்தியா வளர்வதை பிடிக்காதவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்களை செய்திருந்தனர். தற்போது அவதூறு பரப்பியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Source link