தமிழகத்தை உலுக்கிய கிட்னி முறைகேடு வழக்கு.. விசாரணையை கையிலெடுத்த தவெக அரசு – திமுகவுக்கு சிக்கல் – tamilnadu kidney scam tvk government reopens investigation

கடந்த திமுக ஆட்சி காலத்தில்,கிட்னி முறைக்கேடு வழக்கு விஸ்வரூபம் எடுத்தது. மேலும் இந்த விவகாரத்தில் திமுக நிர்வாகி ஆனந்த் என்பவர் முக்கிய தொடர்புடையவராக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தை உலுக்கிய கிட்னி முறைகேடு வழக்கு

மேலும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் நடைபெற்றதாகவும், அந்த மருத்துவமனை மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுடன் தொடர்புடையது என புகார்கள் எழுந்தது. இந்த சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு,முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஊழல் வழக்குகளின் விசாரணையும் வேகமடைந்து உள்ளது. அந்த வகையில், கிட்னி முறைக்கேடு வழக்கை விசாரிக்க மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் தவெக….கோட்டை விடும் அதிமுக?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்சி, ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தொழிலாளர்களை குறிவைத்து, சட்டவிரோதமாக சிறுநீரகங்கள் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கையிலெடுத்த தவெக அரசு

இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த விவகாரம் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. சிறுநீரக கடத்தல் தொடர்பாக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட யார் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, நாமக்கல், திருச்சி, ஈரோடு மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விரிவான விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.இந்த வழக்கின் விசாரணையின்போது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில விவசாயிகளின் சிறுநீரகங்களும், தமிழகத்தைச் சேர்ந்த இடைத்தரகர்கள் உதவியுடன் சட்டவிரோதமாக பெறப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து மகாராஷ்டிரா மாநில சிறப்பு புலனாய்வு குழுவும் திருச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தியது.

தமிழ்நாடு சுகாதாரத்துறையும் தனி விசாரணைக் குழு

அதேபோல், தமிழ்நாடு சுகாதாரத்துறையும் தனி விசாரணைக் குழுவை அமைத்து சம்பவத்தின் அனைத்து கோணங்களிலும் ஆய்வு மேற்கொண்டது. விசாரணையின் அடிப்படையில், பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

தற்போது இந்த விவகாரம் மீண்டும் தீவிரமாக விசாரிக்கப்பட உள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், எந்தெந்த பகுதிகளில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறித்தும் விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.விசாரணை முடிவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அனைவரின் பங்களிப்பும் ஆய்வு செய்யப்பட்டு, சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் திமுகவில் உள்ள நிர்வாகள் கலக்கம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Source link