காரைக்குடி:காரைக்குடியில், சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கையும், களவுமாக சிக்கினார்.
காரைக்குடி மாநகராட்சியில் பில் கலெக்டராக வேலை செய்து வருபவர் சரவணன் 46. இவர் காரைக்குடி மாநகராட்சி வார்டு எண் 4, 5, மற்றும் இலுப்பக்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் வரி வசூல் செய்து வருகிறார்.
இந்நிலையில்’ பேயன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றுக்கு சொத்து வரிக்காக சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் |சரவணனிடம் கேட்டுள்ளார். அதற்காக சரவணன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ரூ. 6 ஆயிரத்தை ஆன்லைன் வழியாக அப்பெண் செலுத்தியுள்ளார்.
எஞ்சிய ரூ. 4 ஆயிரம் கொடுத்தால்தான் வரியை நிர்ணயிக்க முடியும் என்று சரவணன் கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ் தலைமையிலான போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சரவணனிடம், அந்த பெண் அளித்துள்ளார். அதை சரவணன் வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
சரவணனிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்ததோடு அவரது வங்கி கணக்குகள் ஆன்லைன் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்த நிலையில் மீண்டும் லஞ்சம் வாங்கிய சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
