ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே க@ஞ்சா கடத்திய வடமாநில பெண் உட்பட 3 பேர் அதிரடி கைது செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பஸ் நிலையம் கோட்டை முனியப்பன் கோவில் அருகே பெருந்துறை சப் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர். அந்தக் காரில் ஒரு பெண் உள்பட மூன்று பேர் இருந்தனர்.
மேலும் காரில் ஒரு சூட்கேஸ் இருந்தது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் 12 கிலோ எடை உள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள ஓட பள்ளதை சேர்ந்த கோபால் (42) திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் சேர்ந்த தீபக் (20) ஒடிசா மாநிலம் பண்டலா பாபி இடத்தைச் சேர்ந்த பட்டி முண்டா என்பவருடைய மகள் நிலாத்திரி நாயக் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் மூன்று பேரும் ஒடிசா மாநிலத்திலிருந்து பெருந்துறைக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது . இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர இந்த வழக்கில் தொடர்புடைய ஒடிசாவை சேர்ந்த அபய்குமார் என்பவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட கோபால் மீது பெருந்துறை ஈரோடு வீரப்பன்சத்திரம் சூரம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
