ஹராரே: ”சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் வைபவ் சூர்யவன்ஷி முறியடிப்பார். அதற்கான திறமை அவரிடம் உள்ளது,” என பயிற்சியாளர் லட்சுமண் தெரிவித்தார்.
இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான ‘டி-20’ தொடரை 3-0 என முழுமையாக வென்றது. இதில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி அசத்தினார். முதல் போட்டியில் 18 பந்தில் அரைசதம் அடித்தார். மூன்றாவது போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்ப பேட் செய்தார். 31 பந்தில் அரைசதம் எட்டினார். 49 பந்தில் 81 ரன் எடுத்த இவர், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ஆட்டநாயகன் (81 ரன்), தொடர் நாயகன் (3 போட்டி, 151 ரன்) விருதை வென்றார்.
இது பற்றி ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக பணியாற்றிய லட்சுமண் கூறியது:
மூன்றாவது போட்டியில் வைபவ் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கிறது, பெரிய மைதானம் என்பதை எல்லாம் அறிந்து பொறுப்பாக பேட் செய்தார். கடந்த 6 மாதங்களாக, இவரது ஆட்டம் வேற லெவலில் உள்ளது. கடினமான சூழ்நிலையை எளிதில் சமாளிக்கிறார். மூன்றாவது போட்டியில் ‘கேட்ச்’ பிடிக்க முற்பட்ட போது இவரது விரலில் காயம் ஏற்பட்டது. இதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ‘பீல்டிங்’ செய்தார். இது, அணிக்காக தனது பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும் என்ற அவரது மனஉறுதியை எடுத்துக்காட்டியது.
சதம் அடிக்க தவறியதால் ஏமாற்றம் அடைந்தார். அப்போது, இன்னும் நிறைய வாய்ப்பு வரும்; கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினோம். உடற்தகுதியில் மட்டும் முன்னேற்றம் காண வேண்டும். இவருக்கு நீண்ட கிரிக்கெட் பயணம் காத்திருக்கிறது. இளம் வயதில் அறிமுகம், தொடர் நாயகன் விருது என பல சாதனைகள் படைத்துவிட்டார். ஒவ்வொரு நாளும் தனது ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ளும் மனப்பான்மை அவரிடம் உள்ளது. தொடர்ந்து முன்னேற்ற பாதையில் பயணித்து, சர்வதேச அளவில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என உறுதியாக நம்புகிறேன். அதற்கான திறமை அவரிடம் உள்ளது. அடுத்த 5- 10 ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய வைபவ் போன்ற தரமான இளம் வீரர்கள் இருப்பது நமது அதிர்ஷ்டம்,”என்றார்.
ஒருநாள் அரங்கில் வாய்ப்பு
இந்திய அணியின் முன்னாள் வீரர் பரூக் இன்ஜீனியர் கூறுகையில்,”2027ல் நடக்க உலக கோப்பை தொடரை (50 ஓவர்) கருத்தில் கொண்டு, ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்கலாம். வலுவான துவக்கம் தரும் இவர், அதிக வெற்றி தேடித் தருவார். ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக வரலாம். கோலி 3வது, சுப்மன் கில் 4வது இடத்தில் களமிறங்கலாம். இந்திய அணியின் பொக்கிஷமாக திகழும் சூர்யவன்ஷிக்கு, தொடர்ந்து போட்டிகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும்,”என்றார்.
கனவு நனவானது
வைபவ் சூர்யவன்ஷி கூறுகையில்,”ஜிம்பாப்வே தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகி இருந்தேன். எனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, நல்ல துவக்கம் தர முயற்சித்தேன். பின் நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவதே எனது திட்டம். முதல் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்றதன் மூலம் எனது கனவு நனவானது,”என்றார்.
