சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பெட்டியாபுரத்தை சேர்ந்த நரேஷ் என்கிற நரேஷ் குமார் (35) கட்டிட தொழிலாளி. இவர் மீது சேலம் ஜிஹெச் போலீசார் 2020 ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். வேறு ஒரு வழக்கில் கோவை மத்திய சிறையில் நரேஷ் குமார் அடைக்கப்பட்டு இருந்தார்.
தங்கள் வழக்கு தொடர்பாக விசாரிக்க சேலம் ஜி ஹெச் போலீசார் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு கடந்த 21 ஆம் தேதி மாலை ஆஜர்படுத்துவதற்காக சேலம் போலீசார் நரேஷ் குமாரை கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர் .இந்த வழக்கில் நரேஷ் குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் கோவை மத்திய சிறையில் கொண்டு செல்வதற்காக சேலம் போலீசார் தங்களது வேனில் நரேஷ்குமாரை அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் சென்று கொண்டிருந்தபோது டீ சாப்பிட போலீசார் வேனை இரவில் நிறுத்தியுள்ளனர். அப்போது நரேஷ் குமார் போலீசாரை தள்ளிவிட்டு அருகே இருந்த காட்டுப்பகுதிக்குள் புகுந்து தப்பி ஓடி விட்டார் . இதுகுறித்து சேலம் ஜிஹெச் போலீசார் புகாரின்படி பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர் தப்பி ஓடிய கைதியை பிடிக்க பெருந்துறை டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, நரேஷ் குமார் மனைவி கர்நாடகாவைச் சேர்ந்தவர் இதனால் மனைவியை சந்திக்க நரேஷ் குமார் கர்நாடகா சென்றிருக்க வாய்ப்புள்ளது. அவர் தப்பி ஓடியது காட்டுப்பகுதி என்பதால் எந்த வழியே தப்பினார் என தெரியவில்லை. நரேஷ் மீது கொலை உள்ளிட்ட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன தண்டனை பெற்ற கைதி என்பதால் அவரை பிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறோம் என்றனர்.
