ராஜா தட்டித் 'துாக்கிய' வெள்ளி * காமன்வெல்த் பளுதுாக்குதலில் அசத்திய தமிழக வீரர்

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் அசத்திய தமிழக வீரர் ராஜா, வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான பளுதுாக்குதல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் ராஜா முத்துப்பாண்டி 26, பங்கேற்றார்.

தமிழகத்தை சேர்ந்த இவர், ‘ஸ்னாட்ச்’ பிரிவில் இரண்டாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 126 கிலோ துாக்கினார். அடுத்த நடந்த ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் முதல் வாய்ப்பில் ஏமாற்றிய (158 கிலோ) இவர், அடுத்த வாய்ப்பில் அதிகபட்சம் 160 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 286 கிலோ துாக்கிய ராஜா, இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

மலேசியாவின் அஸ்னில் முகமது, 299 கிலோ (‘ஸ்னாட்ச்’ 133, ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ 166) துாக்கி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பப்புவா நியூ கினியா வீரர் மோரியா பாரு (‘ஸ்னாட்ச்’ 125, ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ 157, மொத்தம் 282 கிலோ) வெண்கலப் பதக்கம் பெற்றார்.

பட்ட கஷ்டத்திற்கு பலன் * பெற்றோர் உருக்கம்

துாத்துக்குடி, கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது தந்தை முத்துப்பாண்டி சுமை துாக்கும் தொழிலாளியாகவும், தாய் பேச்சியம்மாள் தீப்பெட்டி ஆலையில் தொழிலாளியாகவும் பணிபுரிகின்றனர்.

கிளாஸ்கோ, காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள ராஜாவும், அவரது அண்ணன் சுரேஷ்குமாரும் துவக்கத்தில் கபடி விளையாட்டில் ஆர்வம் செலுத்திய நிலையில், உடலை பராமரிக்க வேண்டும், உடல் வலிமை பெற வேண்டும் என்பதற்காக சங்கரலிங்கபுரத்தில் உள்ள ஜிம்மில் பயிற்சி பெற சென்றுள்ளனர்.

அவர்கள் ஜிம்மில் காட்டும் ஆர்வத்தை பார்த்து அங்குள்ள பயிற்சியாளர்கள் இருவரையும் பளுதூக்கும் விளையாட்டிற்கு தயார் செய்துள்ளனர்.

கடந்த 2018 ல் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று ஆறாவது இடம் பிடித்த ராஜா, தொடர்ந்து, உடல் நல பாதிப்பால் 2022 ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

கைகொடுத்த தெய்வம்

இதுகுறித்து அவரது பெற்றோர் முத்துப்பாண்டி, பேச்சியம்மாள் கூறுகையில்,”நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. கூலிவேலை செய்து ராஜாவின் பயிற்சிக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தோம். 2018 மற்றும் 2022 ல் காமன்வெல்த் போட்டியில் முயற்சி செய்து வெற்றி பெற முடியவில்லை. தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் செய்த பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது. தெய்வம் எங்களை கைவிடவில்லை,” என்றார்.


6 ஆண்டு 3 ஆப்பரேசன்

* மீண்டு வந்தது எப்படி

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜா 26. இவரது தந்தை முத்துப்பாண்டி சுமை துாக்கும் தொழிலாளியாகவும், தாய் பேச்சியம்மாள் தீப்பெட்டி ஆலையிலும் பணி புரிந்து வருகின்றனர்.

ராஜாவின் அண்ணன் சுரேஷ்குமார், முதலில் பளுதுாக்குதலில் ஈடுபட்டார். ராஜாவின் 12 வயதில், அவரது தந்தை பளுதுாக்குதலில் களமிறக்கினார். 2018 முதல், சென்னையில் உள்ள இந்திய ரயில்வேயில் ஊழியராக உள்ளார்.

கடந்த 2018 ல் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று ஆறாவது இடம் பிடித்தார் ராஜா. 2019ல் தனது 19 வயதில் சமோவாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 123 கிலோ எடை துாக்கி முயற்சித்தார். அப்போது, வலது முழங்கையில் தசைநார் கிழிந்தது.

மும்பை திரும்பிய இவர், அடுத்த சில நாளில் ஆப்பரேசன் செய்தார். அடுத்து வந்த கொரோனா காரணமாக தொடர்ந்து ‘பிசியோ தெரபிஸ்ட்டை’ சந்திக்க முடியாமல் போனது. மீண்டும் பயிற்சியை துவங்கிய போது, முழங்கை அசைப்பது சிரமமாக இருந்தது.

ஒருவழியாக 2 ஆண்டுக்குப் பின் 2021ல் புனேயில், தேசிய சாம்பியன்ஷிப்பிற்காக பயிற்சியில் ஈடுபட்ட போது, கீழே விழுந்தார். வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இது வலது முழங்கையை பாதிக்க, மறுபடியும் ஆப்பரேஷன் செய்யுமாறு ‘அட்வைஸ்’ செய்யப்பட்டது

ஆனால், 2021 தேசிய சாம்பியன்ஷிப், 2022 காமன்வெல்த் பங்கேற்ற திட்டமிட்டார். தகுதிச்சுற்றில் அசத்திய போதும் காமன்வெல்த் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் நண்பரின் ‘அட்வைஸ்’ காரணமாக மீண்டும் பளுதுாக்குதலில் கவனம் செலுத்தினார், பின் குடல்வால் அழற்சி இருப்பது தெரியவர, ஆப்பரேஷன் செய்தார்.

2023ல் தேசிய சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பெற்றார். இந்நிலையில் இடது முழங்காலில் குருத்தெலும்பு பகுதி கிழிந்தது. சுமார் 4 ஆண்டு இடைவெளியில் 3வது முறையாக ஆப்பரேசன் செய்தார். இதில் இருந்து மீண்டு 2024 தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.

ஆறு ஆண்டுகளில் மூன்று ஆப்பரேசன், மஞ்சள் காமாலை, தொடர் காய்ச்சல், உடல் எடை குறைதல் என பல்வேறு சிக்கல்களில் இருந்து மீண்டு வந்து, தற்போது வெள்ளி வென்று சாதித்துள்ளார் ராஜா.

சமர்ப்பணம்

காமன்வெல்த்தில் முதல் பதக்கம் வென்ற ராஜா கூறுகையில்,” காயம் காரணமாக 2022ல் தகுதி பெற முடியவில்லை. இதன் பின் கடந்த இரு ஆண்டுகளாக மோடி நகரில் பயிற்சி பெற்றேன். இதற்கான பலன் கிடைத்துள்ளது. எனினும் பயிற்சியில் செயல்பட்டதைப் போல, இங்கு தங்கப்பதக்கம் வெல்லும் அளவுக்கு எடை துாக்கவில்லை. இருப்பினும், வெள்ளி வென்றது மகிழ்ச்சி. இதை எனது பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் சமர்ப்பிக்கிறேன்,” என்றார்.

Source link