மும்பை: பிரான்ஸ் நாட்டின் தொழிலாளர் சட்டங்களை முழுமையாக பின்பற்றாத காரணத்திற்காக, நம் நாட்டின், ‘இன்போசிஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு, அந்நாட்டு அரசு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சில், கடும் தொழிலா ளர் நலச் சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அங்கு, வாரத்திற்கு 35 மணி நேரம் மட்டுமே நிலையான வேலை நேரம். ஊழியர்களின் தினசரி மற்றும் வாராந்திர ஓய்வு நேரங்கள், கூடுதல் நேர வேலைக்கான ஊதியம் ஆகியவை சட்டப்படி துல்லியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், நம் நாட்டின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், பிரான்ஸ் நாட்டிலும் இயங்கி வருகிறது.
அங்குள்ள கிளையில் பணியாற்றும் ஊழியர்களின் வேலை நேரத்தை கண்காணிக்க பயன்படுத்தும், ‘டிஜிட்டல்’ அமைப்பில், மூன்று முக்கிய குறைபாடுகளை பிரான்ஸ் அரசு கண்டறிந்துள்ளது.
‘இன்போசிஸ் ஊழியர்கள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் நேரங்கள் துல்லியமாக பதிவாகவில்லை. ‘வேலை நேர பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த, உரிய ஆதாரங்கள் இல்லை, குறிப்பிட்ட சில பிரிவு ஊழியர்களின் கூடுதல் பணி நேரத்தை, இந்த மென்பொருளால் முறையாக கண்காணிக்க முடியவில்லை’ என, பிரான்ஸ் நாட்டின் பிராந்திய தொழிலாளர் நல ஆணையம் குற்றஞ்சாட்டியது.
அத்துடன், பிரான்சின் சட்டத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யாத இன்போசிஸ் நிறுவனத்திற்கு, 2 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதை, இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு சந்தை அறிக்கையும் உறுதிப்படுத்தி உள்ளது.
‘எனினும், இந்த அபராதம், நிறுவனத்தின் நிதிநிலை, செயல்பாடுகள் அல்லது பிற வணிக நடவடிக்கைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என, இன்போசிஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
