சிவகாசி / விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் தகர ஷெட்டில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ரவீந்திரனின் மகன்கள் ராமச்சந்திரன் (40), ராம்பிரகாஷ் (32). இவ்விருவரும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தகர ஷெட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்தனர்.
நேற்று முன்தினம் காலை பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பணிபுரிந்த ராம்பிரகாஷ், மீனம்பட்டியைச் சேர்ந்த இன்னாசிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராமச்சந்திரன் படுகாயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில் இன்னாசிமுத்துவின் சகோதரர் அய்யப்பராஜும், அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரும் மாயமானதாக பதிவு செய்து போலீஸார் விசாரித்து வந்தனர். உயிரிழந்தோரின் உடல் பாகங்கள் போலீஸாரால்சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் நேற்று உயிரிழந்தார். மாயமானதாகக் கருதப்பட்ட அய்யப்பராஜ், பாண்டித்துரை ஆகியோரும் இந்த வெடி விபத்தில் உயிரிழந்ததாக போலீஸார் நேற்று உறுதி செய்தனர்.
இதையடுத்து வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. நேற்று பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், ராமச்சந்திரன், ராம்பிரகாஷ், பாண்டித்துரை ஆகியோரது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இன்னாசிமுத்து, அய்யப்பராஜ் ஆகியோரது உடல்களை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
