சென்னை: மாநில பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலர் தீரஜ்குமார், மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.பி.விஜயகுமார், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், உயர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்திறனை மேம்படுத்துவது, உயர்கல்வி தரத்தை உயர்த்துவது, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், பாடத்திட்ட குழுக்களை உரிய காலத்தில் மறுசீரமைப்பு செய்வது, விளைவு அடிப்படையிலான கல்விமுறை, செமஸ்டர் தேர்வுகளை குறிப்பிட்ட காலத்தில் நடத்தி தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவது, மாணவர்களுக்கான கல்விச் சேவைகளை இணையவழியில் விரிவுபடுத்துவது, ஆய்வகம் மற்றும் வளாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜி கே.பவானீஸ்வரி, உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பு நடவடிக்கையை மேம்படுத்துவது தொடர்பாக பதிவாளர்களிடையே உரையாற்றினார்.
பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி செயலியின் அவசரகால உதவி, பாதுகாப்பு அம்சங்கள், அதன் பயன்பாடுகள் குறித்து மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
