சென்னை: பதவி விலகிய 6 எம்எல்ஏக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்து.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று சந்தித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவில் இருந்து வெற்றி பெற்று குதிரை பேரத்தில் பதவி விலகி, ஆளும்கட்சியில் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சார்பில் இதுவரை 3 புகார் மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், மீண்டும் பேரவைத் தலைவரை சந்தித்து, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.
மேலும், ஏற்கெனவே கொடுத்த கடிதங்களின் அடிப்படையில் நாங்கள் கேட்டிருந்த சில விளக்கங்களை பேரவைத் தலைவர் வழங்கவில்லை. இதையடுத்து, பதவி விலகிய எம்எல்ஏக்கள் அளித்த விளக்க கடிதங்களின் நகல்களைக் கேட்டுள்ளோம்.
தருவதாக கூறியுள்ளார். பதவி விலகியவர்கள் என்ன விளக்கம் அளித்துள்ளனர் என்று தெரிந்தால்தான், அதற் குரிய பதிலை பேரவைத் தலைவரிடம் நாங்கள் தெரிவிக்க முடியும். ஜூலை 30-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவது குறித்து பொதுச் செயலாளர் பழனிசாமி முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
