மேகதாது விவகாரம் : அன்புமணி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ், “காவேரி நீர் தகராறு தொடர்பாக 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மேல் படுகை மாநிலமான கர்நாடகா, காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவதற்குக் கீழ் படுகை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதை மத்திய அரசு அறிந்துள்ளதா?. முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்திற்குக் கீழ் படுகை மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற்றுள்ளதா?. 

ஆம் எனில், அதன் விவரங்கள் என்ன?. மத்திய அரசின் முன் உள்ள இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என ஜலசக்தி துறை அமைச்சருக்குக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் ஜல்சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி அளித்த பதிலில், “காவேரி நீர் தகராறு தொடர்பாக 16.02.2018 அன்று வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவதற்குத் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய இதர கீழ் படுகை மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா மாநிலம் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

உச்ச நீதிமன்றம் தனது 16.2.2018 தேதியிட்ட உத்தரவில், காவேரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் 2007ஆம் ஆண்டு தீர்ப்பின் பிரிவு 18ஐ (XVIII) பொருத்தமானது எனக் கண்டறிந்து, “இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவில் உள்ள எதுவும், எந்தவொரு மாநிலமும் அதன் எல்லைக்குள் நீரின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கோ, அந்த மாநிலத்திற்குள் உள்ள நீரின் பலனைத் தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு முரணில்லாத வகையில் அனுபவிப்பதற்கோ உள்ள உரிமை, அதிகாரம் அல்லது அதிகார வரம்பைப் பாதிக்காது” என்று தனது உத்தரவில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கர்நாடகா அரசால் 2019இல் சமர்ப்பிக்கப்பட்ட மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, காவேரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் தற்போதைய மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரி, திட்ட அதிகார அமைப்பிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

Source link