ஏ.டி.எம் மூலம் பணம் எடுப்பதைப் போல அரிசி, கோதுமை போன்ற தானியங்களையும் ஏ.டி.எம் மூலம் வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதற்கான தானிய ஏ.டி.எம்-களை கேரள மாநில உணவுத் துறை நிறுவ உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் ரேஷன் கடைகள் மற்றும் சப்ளைகோ விற்பனை நிலையங்களில் இந்தத் தானிய ஏ.டி.எம் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் ஒத்துழைப்போடு ஒடிசா அரசு முதலில் தானிய ஏ.டி.எம்-ஐ நிறுவியது. ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களும் இத்திட்டத்தைச் சோதனை அடிப்படையில் செயல்படுத்தியுள்ளன. இந்தத் திட்டம் ஒடிசா மாநிலத்தில் வெற்றி பெற்றதைப் பின்பற்றி கேரளத்திலும் செயல்படுத்தப்படுகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 24 மணி நேரமும் இயங்கும் தானிய ஏ.டி.எம் இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது. பயனாளிகள் தானிய ஏ.டி.எம்மில் தங்களின் ரேஷன் கார்டு அல்லது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். ரேஷன் கடைகளில் உள்ளது போல பயோமெட்ரிக் முறை மூலம் விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.
ஏ.டி.எம் மிஷின் சரிபார்த்த பிறகு, ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி மற்றும் கோதுமையை வழங்கும். 5 நிமிடங்களுக்குள் 50 கிலோ வரை தானியங்களை இதில் பெற முடியும்.

கேரள மாநிலத்தில் மொத்தம் 13,915 ரேஷன் கடைகள் உள்ளன. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை விரைவுபடுத்த இந்தத் தானிய ஏ.டி.எம்-கள் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்படுள்ளது. ரேஷன் கார்டுதாரர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தானியங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இது புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பெரும் பயனளிக்கும்.
மேலும், ரேஷன் கடைகளில் நடக்கும் எடைக்குறைவுப் புகார்களுக்கும் இது தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கேரளத்தில் முழுமையாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், அது ரேஷன் கடை நடத்தும் கூட்டுறவு சங்கங்களையும், ஊழியர்களைப் பாதிக்கக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
இதுகுறித்து கேரள உணவுத்துறை அமைச்சர் அனூப் ஜேக்கப் கூறுகையில், “இத்திட்டம் சோதனை அடிப்படையில் மட்டுமே தொடங்கப்படுகிறது. இது ரேஷன் கடை ஊழியர்களைப் பாதிக்காது” எனத் தெரிவித்தார்.
