பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்காவிட்டால் ராணுவ நடவடிக்கைக்கு தயார்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ”பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்காதபட்சத்தில் ராணுவ நடவடிக்கையும் ஒரு முடிவாக உள்ளது. அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து கடந்த 13 நாட்களாக அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஈரான் வீசி வந்தது. கடந்த 13 நாட்களாக தொடர்ந்து மோதல் நடந்து வந்த நிலையில், இந்த தாக்குதலை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளார்.

இந்நிலையில் ஈரானுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை அதிபர் டிரம்ப் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: தற்போதைக்கு ராஜதந்திரம் வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். ஈரானுடன் தொடர்புடைய அனைவரும் என்னிடம், தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். நாங்கள் ஈரானுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.

இருந்தாலும், ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்காத பட்சத்தில் ராணுவ நடவடிக்கையும் ஒரு முடிவாக உள்ளது. அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தைகளுக்கு மற்றொரு வாய்ப்பளிப்பதற்காக, திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நிறுத்தி வைத்து இருக்கிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Source link