பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் (33), இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் (24) காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் புதிய வதந்தி ஒன்று காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மும்பை பாந்த்ரா மேற் பகுதியில் உள்ள ‘பூஜி கஃபே’ உணவகத்தில் இருவரும் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானதே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
வைரல் வீடியோ:
சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புன்னகையுடன் கஃபேவை விட்டுவெளியேறி தனது காரை நோக்கிச் செல்கிறார். அதே வேளையில் நடிகை மிருணாள் தாகூர் அந்த கஃபேவின் உள்ளேயே அமர்ந்திருக்கிறார்.
ஆனால், வீடியோவில் இருவரும் ஒன்றாகப் பேசுவதோ அல்லது நெருக்கமாக அமர்ந்திருப்பதோ போன்ற எந்தவொரு காட்சியும் இடம் பெறவில்லை. இருப்பினும், இரு பிரபலங்களும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் காணப்பட்டதால், ‘இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்களா?’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளனர்.
மிருணாள் தாகூரோ அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலோ இந்த வீடியோ அல்லது காதல் வதந்திகள் குறித்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இரு ரசிகர் பட்டாளங்களைச் சேர்ந்த சிலர், இது ஏதேனும் ஒரு விளம்பரப் படப்பிடிப்புக்காக அல்லது தொழில்முறை சந்திப்புக்காக நடந்த சந்திப்பாக இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மிருணாள் தாகூருக்கு 33 வயதும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 24 வயதும் ஆகிறது. இவர்களுக்கு இடையே உள்ள 9 ஆண்டுகள் வயது வித்தியாசம் குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
ரசிகர்களின் ஆதரவு:
மிருணாள் தாகூரின் ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். “சில நாட்களுக்கு முன் தனுஷுடன் இணைத்துப் பேசினார்கள், பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இப்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் என யாராவது ஒருவருடன் மிருணாளைத் தேவையின்றி இணைத்துப் பேசுவதை நிறுத்துங்கள்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது, மிருணாள் தாகூர் ‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணி விளையாடவுள்ள அடுத்தடுத்த தொடர்களுக்குத் தயாராகி வருகிறார்.
