கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிய நிகழ்வு பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இதனை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் பின்னணி பற்றி மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் விரிவாக பேசியிருக்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் சென்றிருந்த தவெக தலைவர் விஜய்யை சந்திக்க பெரும் திரளான மக்கள் வருகை புரிந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சராக பதவியேற்ற விஜய் கடந்த ஜூலை 10ஆம் தேதி நேரில் சென்று அரசு பணி ஆணை வழங்கினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்தன. இதுதொடர்பான வழக்கில் அரசு பணி ஆணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
கரூர் அரசு வேலை – உயர் நீதிமன்ற உத்தரவு
திறன் வளர் பயிற்சி வழங்கி குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உதவி செய்யலாம் என அறிவுறுத்தியது. இந்த உத்தரவு நேற்றைய தினம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒருபுறம் நீதிமன்ற உத்தரவை நியாயப்படுத்தும் நபர்களும், மறுபுறம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிடும் தவெக அரசும் என நகர்வுகள் முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூரில் CM விஜய்!Supreme Court இல் நடந்தது என்ன? வெளியான PLAN ! இதுதான் விஷயமா?
சிபிஐ விசாரணை – பிறழ் சாட்சியாக மாற வாய்ப்பு
இத்தகைய சூழலில் அரசு பணி வழங்கியிருப்பது சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக மாற்றுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இதையும் பலர் சுட்டிக் காட்டுகின்றனர். அதேசமயம் முதலமைச்சராக தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க அரசு பணி ஆணை வழங்கியிருக்கிறார் என தவெகவினர் கூறுகின்றனர். இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் பேசுகையில், சரி தவறு என்பதை தாண்டி அரசின் Policy Decision. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி கொடுக்கப்பட்டது.
அரசின் ஃபெயிலியரை மறைக்க முயற்சி
ஏனெனில் அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அரசின் ஃபெயிலரை மறைக்க வேண்டும் என திட்டமிட்டனர். அதேபோல் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த போது, அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதுவும் அரசின் ஃபெயிலரை மறைப்பதற்காக தான். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் 10 லட்ச ரூபாய் கொடுத்ததும் அரசின் ஃபெயிலரை மறைக்க வேண்டும் என்பதற்கு தான். இந்த வரிசையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, திமுகவிற்கு எதிராக ஒரு விஷயத்தை செய்கிறேன் என்ற வகையில் செயல்படுகிறது.
கரூர் போலீசின் ட்ராமா – முதல்வர் விஜய் பேச்சு
கரூரில் நடந்தது எல்லாமே திமுகவின் சதி என்பதை மீண்டும் பதிவு செய்கிறார். சமீபத்தில் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசும் போது, போலீசாரை நம்பி நான் சென்றுவிட்டேன். இப்படி நடக்கும் என்று தெரியாமல் போய்விட்டேன். ஆனால் அவர்கள் இப்படி ஒரு ட்ராமா செய்வார்கள் எனத் தெரியவில்லை என்றார். இவை அனைத்தையும் முதலமைச்சர் என்ற நாற்காலியில் அமர்ந்து கொண்டு மிகவும் சவுகரியமான இடத்தில் இருந்தபடி பேசுகிறார். தற்போது பேசுவதை போலீசார் யாரும் மறுத்து பேச முடியாது. முதலமைச்சர் தவறாக பேசுகிறார் எனவும் சொல்ல முடியாது.
உச்ச நீதிமன்றம் செல்லும் தவெக அரசு
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் தவெக அரசின் Policy decision மூலம் திமுக மீது தவறான வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என நினைக்கின்றனர். ஒருவேளை ஸ்டெர்லைட், சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு வேலை வழங்கியதை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருந்தால் அதன் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கும். அதில் அரசு பணி ஆணையை ரத்து கூட செய்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் அடுத்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது என்ற இடம் முக்கியத்துவம் பெறுகிறது என மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் பேசினார்.
Source link
