தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் கழக (TNSTC) பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போன்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் விவரம்;
*பேருந்து பயணத்தின் போது செல்போனில் உரத்த குரலில் தொடர்ந்து பேசக் கூடாது.
*செல்போன் ஸ்பீக்கரை (Speakerphone) ஆன் செய்து பேசுவதோ அல்லது பாடல்கள், வீடியோக்கள் கேட்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
*ஹெட்போன், இயர்போன் அல்லது ப்ளூடூத் (Earphones/Bluetooth) சாதனங்களைப் பயன்படுத்தாமல் உரத்த ஒலியில் வீடியோ பார்ப்பது மற்றும் இசை கேட்பது கூடாது.
*மற்ற பயணிகளுக்கு எந்தவிதமான அசௌகரியமும் ஏற்படாத வகையில் மட்டுமே செல்போன்களைப் பயன்படுத்த வேண்டும்.
போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல்ராஜ் அனைத்துப் போக்குவரத்து கழகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பின்வரும் சட்ட விதிகளைக் குறிப்பிட்டுள்ளார்:
மோட்டார் வாகன ஒழுங்குமுறை விதிகள் 2017: பேருந்துகளில் உரத்த ஒலியில் இசை ஒலிப்பதைத் தவிர்க்க ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் விதிகள் 1989 (விதி 228): பயணிகளுக்கு இடையூறு அல்லது சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயலும் விதிமீறலாகவும் முறைகேடாகவும் கருதப்படும்.
பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்
பயணிகளிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளின் முன்பகுதி, நடுப்பகுதி மற்றும் பின் பகுதிகளில் இப்புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் (Stickers) ஒட்டப்பட வேண்டும் எனத் தலைமைச் செயலகப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் அமைதியான மற்றும் அசௌகரியமில்லாத பயண அனுபவத்தைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
