நமது சிறப்பு நிருபர் 4 ஆயிரம் கி.மீ., தொலைவில் இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள கடற்படை தளம் மீது ஈரான் ஏவுகணை

நமது சிறப்பு நிருபர்

4 ஆயிரம் கி.மீ., தொலைவில் இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள கடற்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது அமெரிக்க படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியப்பெருங்கடலில் அமெரிக்கா- பிரிட்டன் கூட்டு கடற்படை தளம் டியாகோ கார்சியா தீவில் அமைந்துள்ளது. இந்த கடற்படை தளம் ஈரானில் இருந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

ஒரு ஏவுகணை பாதி பயணத்தில் தோல்வி அடைந்தது. இன்னொரு ஏவுகணையை அமெரிக்க படையினர் சுட்டு வீழ்த்தினர். 4 ஆயிரம் கி.மீ., தொலைவில் அமைந்துள்ள கடற்படை தளம் மீது ஈரான் ஏவுகணை வீசியதால், அமெரிக்க படையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த செய்தியை அமரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த ஏவுகணை தாக்குலை எப்பொழுது ஈரான் மேற்கொண்டது என்பது குறித்து எந்த தகவலையும் குறிப்பிடவில்லை.

இந்தத் தாக்குதல் முயற்சி ஈரானின் ஏவுகணை வலிமை குறித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ஈரான் எந்தளவுக்கு வலிமைப்படுத்தி இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஈரானுக்கும்- அமெரிக்க, இஸ்ரேலுக்கு இடையே பகைமை தீவிரமடைந்து வரும் வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள், கோரம்ஷார்-4 வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் கணித்து இருக்கின்றனர். இது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையாகும்.

இவ்வளவு தூரங்களில் உள்ள இலக்குகளை ஈரானால் தாக்க முடியும் என்பதற்கான முதல் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் சம்பவம் பார்க்கப்படுகிறது. இதனால், வளைகுடா பிராந்தியத்திலும், மத்திய தரைக்கடல், இந்தியப் பெருங்கடலில் இருக்கும் அமெரிக்க கப்பல்கள், ஐரோப்பிய நகரங்கள் பலவும் ஈரான் ஏவுகணை தாக்குதல் வளையத்துக்குள் இருப்பது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.

Source link