தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்? மேலும் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்

பிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“1,400 ரூபாய்க்கு விற்பனையான 25 கிலோ மூட்டை அரிசி இன்று 1,700 முதல் 1,800 ரூபாய் வரை விற்பனையாகிறது. அடுத்தடுத்த வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அரிசி வணிகர்கள் தெரிவிக்கின்றனர்”

திருப்பூர் மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் மைதிலியின் கருத்து இது. அரிசியின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பதால் சில்லறை விற்பனை விலையையும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

“25 கிலோ வரையிலான சில அரிசி வகைகள் மூட்டை ரூ.2,000 வரை கூட செல்கிறது. உள்ளூர் அரிசி வகைகளும் விலை உயர்ந்துள்ளது,” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, பல்வேறு தரப்புகளில் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன.

அரிசியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் போனதும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததுமே இதற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், “மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் சந்தையில் அரிசியின் புழக்கத்தை அதிகரித்து விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மாநில அரசும் அதன் பங்குக்கு விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகள், மொத்த வணிகர்கள் ஆகியோரிடம் உள்ள அரிசியில் 20 விழுக்காட்டை அடக்க விலைக்கு அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள், கூட்டுறவு விற்பனை அங்காடிகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது சில வகை அரிசியின் விலை 20 முதல் 30% வரை விலை உயர்ந்துள்ளதாக, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

ஒவ்வொரு ஆண்டும் பருவத்துக்கு ஏற்ப விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்றாலும் தற்போது உள்ள அளவுக்கான விலை உயர்வு இருந்ததில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், “நெல் உற்பத்தியை வைத்து மட்டும் கணக்கிட்டுவிட முடியாது. தமிழ்நாட்டின் அரிசித் தேவையில் சுமார் 40% இதர மாநிலங்களில் இருந்து தான் வருகிறது. உலகளவில் அரிசி தேவை அதிகரித்துள்ளது. அந்த அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கவில்லை.

அரிசி விலை உயர்வு, தமிழ்நாடு

பட மூலாதாரம், Diptendu Dutta/NurPhoto via Getty Images

விலை உயர்வுக்கான காரணங்கள் என்ன?

தமிழ்நாடு தனது அரிசி நுகர்வுக்கு அண்டை மாநிலங்களை அதிகம் சார்ந்திருக்கிறது என்கிறார், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானியான கோபிநாத். ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அரிசி உற்பத்தியில் நிகழும் மாற்றங்கள் தமிழ்நாட்டில் அரிசி இருப்பை பாதிக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

மேலும் அவர், “அரிசி உற்பத்தி குறைவு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கியமான காரணம். அது போக பராமரிப்புப் பணிகள் காரணமாக, துங்கபத்ரா அணை பாசனப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்ய வேண்டாம் என்று கர்நாடக அரசு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.” என்றார்.

ஏற்றுமதியை தடை செய்வது தீர்வாகுமா?

கடந்த காலங்களில் அரிசி விலை உயர்வு ஏற்பட்டபோது ஏற்றுமதிக்கு அரசாங்கம் தடை விதித்த சம்பவங்களும் இருக்கின்றன. ஆனால் அந்தக் கருத்தோடு பி.ஆர். பாண்டியன் முரண்படுகிறார்.

இந்த விலை உயர்வை அரசாங்கம் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது என்று கூறும் அவர், ஏற்றுமதிக்கு தடை விதிப்பதும் இந்தச் சூழலில் சரியாக இருக்காது என்றும் தெரிவிக்கிறார்.

அதற்கான காரணத்தை விவரித்த அவர், “கடந்த ஓராண்டில் நெல் சாகுபடிக்கான உள்ளீட்டு செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. 1,300 ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை உரம் இப்போது 2,200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் நெல்லுக்கான கொள்முதல் விலை என்பது அந்த அளவுக்கு உயர்த்தப்படவில்லை.

ஒரு குவின்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் எனக் கேட்கிறோம். ஏற்றுமதியில் தான் அவர்களுக்கு உரிய விலை கிடைக்கிறது. இந்தச் சூழலில் ஏற்றுமதிக்கு தடை விதித்தால் நெல் உற்பத்தியாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது ஒரு குழப்பமான சூழ்நிலை. கண்காணிப்பு திறம்பட இருக்க வேண்டும். இந்த நிலை சில மாதங்களில் சரியாகும் என எதிர்பார்க்கிறோம். இதில் ஒருமித்த கருத்து இல்லை, இந்த பிரச்னைகளை ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து முடிவெடுக்க வேண்டும்.

அரிசி விலை உயர்வு, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

‘எரிபொருள் மற்றும் உர விலை உயர்வால் ஏற்பட்ட தாக்கம்’

உர விலை உயர்வு மட்டுமல்லாது, எரிபொருள் விலை உயர்வும் கூட அரிசி விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது என்கிறார், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுவாமிமலை விமலநாதன். லாரி உரிமையாளர்களும் வாகனங்களின் வாடகையை 25% வரை உயர்த்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் சூழலில் அதன் தாக்கம் இனிவரும் நாட்களில் தெரியலாம்.

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. ஆனால் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு தான் நெல் உற்பத்தி மிகுதியாக இருக்கிறது எனக் கூறி நெல்லுக்கு ஊக்கத்தொகை தருவதை நிறுத்துமாறு மாநில அரசுகளிடம் கூறியது. ஆனால், தற்போது உற்பத்தி குறைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதனால் எங்கே தட்டுப்பாடு வந்துள்ளதை என்பதைப் பார்க்க வேண்டும்.” என விமலநாதன் தெரிவித்தார்.

‘அச்சமூட்டும் நிலை இல்லை’

குறிப்பிட்ட சில அரிசி ரகங்களின் விலை உயர்ந்துள்ளன என்றாலும் இது ஒரு அச்சமூட்டும் நிலைமை இல்லை என்கிறார், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் வணிக சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் ஏசி மோகன்.

மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பிரதானமாக மோட்டா, சன்ன ரக மற்றும் மிக சன்ன ரக வகைகள் தான் இருக்கின்றன. இவற்றில் மிக சன்ன ரக வகைகளை ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வாங்குகிறோம். அங்கு மழை குறைந்ததால் நெல் விலை உயர்ந்தது, அதனால் அரிசி விலையும் உயர்ந்தது. மிக சன்ன ரக அரிசி விலை மட்டுமே தற்போது உயர்ந்துள்ளது. மற்ற இரண்டு அரிசி வகைகளின் விலை உயரவில்லை.” என்றார்.

அவரது கூற்றுப்படி, தமிழ்நாட்டின் அரிசித் தேவை சுமார் 91 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. அதில் சுமார் 70% உற்பத்தி தான் தமிழ்நாட்டில் நடக்கிறது.

“மீதம் 30% தேவைக்கு நாம் ஆந்திரா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களைச் சார்ந்து தான் இருக்கிறோம். நம்முடைய தட்டுப்பாட்டை மற்ற மாநிலங்களில் இருந்து பெறுவதன் மூலமே தொடர்ந்து பூர்த்தி செய்து வருகிறோம்.

இந்த விலை உயர்வு தற்காலிகமானது தான். தமிழ்நாட்டில் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் குறுவை சாகுபடி வருகிறபோது விலை சமநிலை அடைந்துவிடும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

அரிசி விலை உயர்வு, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போல தமிழ்நாட்டிலும் உற்பத்திக்கு ஊக்க மானியம் வழங்க வேண்டும் என்கிறார், சுவாமிமலை விமலநாதன்.

தொடர்ந்து பேசிய அவர், “அது உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பதை தடுக்கும். தமிழ்நாட்டில் உற்பத்தி மானியம் முன்னர் குறுவைக்கு சிறப்புத் தொகுப்பு திட்டம் என்கிற பெயரில் இருந்தது. அதனை மீண்டும் கொண்டு வர வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நெல் உற்பத்திக்கு நிகராக அரிசி உற்பத்தி என்பது இருப்பதில்லை என்று கூறும் பி.ஆர்.பாண்டியன், “ஒவ்வொரு ஆண்டும் நெல் வீணாகும் நிகழ்வுகளைப் பார்த்து வருகிறோம். சம்பா நெல் சாகுபடியும் குறைவாக இருந்தது. அரசு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதோடு தனியார் அரிசி ஆலைகளையும் ஈடுபடுத்தி அரிசி உற்பத்தி சீராக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக விவரித்த கோபிநாத், “திறந்த சந்தையில் தடையின்றி அரிசி விநியோகம் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் வறட்சியைத் தாங்கக்கூடிய அரிசி வகைகளை ஊக்குவிக்க வேண்டும்.” என்றார்.

காலநிலை மாற்றத்தின் பங்கு என்ன?

தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அரிசி உற்பத்தியில் காலநிலை மாற்றம் ஒரு காரணம் என்றாலும் அது மட்டுமே முழு காரணம் அல்ல என்கிறார் கோபிநாத்.

“எல் நினோவின் தாக்கம் பொது கொள்முதல் மற்றும் திறந்த சந்தையில் அரிசி கிடைப்பதில் நிச்சயம் தாக்கம் செலுத்தும் என்றாலும் அது உடனடியாக தெரியாது. நெல் உற்பத்தியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும்,” என்றார் அவர்.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி நிறைவடைகிறபோது எல் நினோவின் முழுமையான தாக்கம் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link