ஆசிரியர்கள் கவனத்திற்கு: குறைதீர்ப்பு முகாம் மனுக்கள் மீது 5 நாளில் தீர்வு; தொடக்கக் கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர்கள் குறைதீர்ப்பு முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 5 வேலை நாட்களுக்குள் உரிய தீர்வு காண வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்கம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் (BEO) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் (DEO) மாதந்தோறும் சனிக்கிழமைகளில் ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சேவை தொடர்பான குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த முகாம்களில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது பணிப்பதிவேடு (Service Register) பராமரிப்பு, சிறப்பு நிலைத் தகுதி (Selection / Special Grade), ஊதியப் பலன்கள் (Pay Fixation), மாறுதல் (Transfer) கோரிக்கைகள் உள்ளிட்டப் பல்வேறு சேவைச் சார்ந்த குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.

இதனிடையே, சில மாவட்டங்களில் இக்குறைகேள் முகாம்கள் பெயரளவில் மட்டுமே நடத்தப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். ஆசிரியர்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்காமல், ஒரு பெட்டியை வைத்து அதில் மனுக்களைப் போடுமாறு அறிவுறுத்துகின்றனர். அப்படி மனு அளித்தாலும் அதற்கு உடனடியாகத் தீர்வு கிடைப்பதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களின் இந்த புகார்களைத் தொடர்ந்து, தொடக்கக் கல்வி இயக்கக அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம்களை மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையிலேயே நேரடியாக நடத்த வேண்டும். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 5 வேலை நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்பட வேண்டும். மனுக்களைக் கண்காணிக்க ஒவ்வொரு அலுவலகத்திலும் தனியாக ஒரு ‘பதிவேடு’ (Register) பராமரிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கும் குறைகளுக்கும் மிக விரைவாகத் தீர்வு எட்டப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Source link