உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கேப் வெர்டே அணியின் சிட்னி லோபஸ் கப்ரால் அர்ஜெண்டினாவுக்கு எதிராக அடித்த அந்த அசத்தலான கோல், ரசிகர்களின் பொது வாக்கெடுப்பில் தொடரின் சிறந்த கோல் என்ற பெருமையை பெற்றுள்ளது.
அர்ஜெண்டினா ஏற்கெனவே 2-1 என்று முன்னிலை வகித்திருந்தது. அந்த நேரத்தில் ஆட்டத்தின் 103வது நிமிடத்தில் கேப் வெர்டே வீரர் லோபஸ் கப்ரால் அந்த அற்புதமான கோலை அடித்து 2-2 என்று சமன் செய்ய அர்ஜெண்டினா அதிர்ச்சிக்குள்ளானது, ஆனால் எப்படியோ அர்ஜெண்டினா 3-2 என்று அந்தப் போட்டியில் வென்றது வேறு கதை.
உலகக் கோப்பையில் முதல் முறையாக பங்கேற்ற கேப் வெர்டே அணி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில், அர்ஜென்டினாவுக்கு எதிரான 32-வது சுற்று ஆட்டத்தில் லோபஸ் கப்ரால் அடித்த அபார கோல் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. கூடுதல் நேரத்தில் வலது புறத்திலிருந்து பந்தை பெற்ற அவர், தூரத்திலிருந்து வளைத்து அடித்த ஷாட், அர்ஜென்டினா கோல்கீப்பரால் தடுக்க முடியாத வகையில் வலையின் மேல் மூலையில் பாய்ந்தது. அந்த கோல் மூலம் ஆட்டம் 2-2 என சமநிலைக்கு வந்தது. இருப்பினும், பரபரப்பான அந்தப் போட்டியில் கேப் வெர்டே இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இந்த உலகக் கோப்பையில் மொத்தம் அடிக்கப்பட்ட 308 கோல்களில் இருந்து ரசிகர்கள் வாக்களித்ததில், லோபஸ் கப்ராலின் இந்த கோல் முதலிடம் பிடித்தது. உஸ்பெகிஸ்தானின் எல்டோர் ஷோமுரோடோவ், காங்கோவுக்கு எதிராக அடித்த லாப் கோல் இரண்டாவது இடத்தையும், ஹெய்டியின் வில்சன் இசிடோர் மொராக்கோவுக்கு எதிராக அடித்த சக்திவாய்ந்த கோல் மூன்றாவது இடத்தையும் பெற்றன.
சிறந்த கோலுக்கான வாக்கெடுப்புக்காக 12 கோல்கள் அடங்கிய பட்டியலை ஃபிஃபா வெளியிட்டிருந்தது. பொதுமக்கள் வாக்களிப்பு திங்கள்கிழமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து லோப்ஸ் கப்ராலின் கோல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.
கோலை அடித்த பிறகு லோபஸ் கப்ரால் வெளிப்படுத்திய கொண்டாட்டமும் உலகக் கோப்பையின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக அமைந்தது. அவரை கட்டிப்பிடிக்க விரைந்த சக வீரர்களிடமிருந்து விலகி, நேராக ரசிகர்கள் அமர்ந்திருந்த பகுதியில் ஏறிச் சென்று தனது காதலியை அணைத்ததுடன், தனது தாயையும் தேடிய காட்சி ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
முதல் உலகக் கோப்பை பயணத்திலேயே கேப் வெர்டே அணி சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் சாம்பியனான ஸ்பெயினுக்கு எதிரான தொடக்கப் போட்டியில் கோல்கீப்பர் வோசின்யாவின் அபார தடுப்பினால் 0-0 என்ற கோல் இல்லாமல் நடப்பு உலகச் சாம்பியன் அணியை நிறுத்தியது. எனவே இந்த உலகக்கோப்பையின் 2 டாப் அணிகளான முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினா, நடப்பு சாம்பியன் ஸ்பெயின் ஆகிய இரு அணிகளையுமே கண்களில் விரலை விட்டு ஆட்டியது கேப் வெர்டே.
