அட்டப்பாடி:
கேரள மாநில எல்லைப் பகுதியான அட்டப்பாடியில், நடுத்தர வயது நபர் ஒருவரைத் தமிழகக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழக போலீசார் மீது கேரள மாநிலப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள புதூர் குளப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ் (51). நேற்று இரவு சுமார் 9 மணியளவில், தமிழ்நாடு தடாகம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் அடங்கிய குழுவினர் இவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, “உன்னிடம் கஞ்சா இருக்கிறதா?” எனக் கேட்டு அந்த நபரைக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது இருசக்கர வாகனத்தையும் தமிழ்நாடு போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு போலீசாரின் இந்தத் தாக்குதலில் முருகேஷின் விலா எலும்பு முறிந்ததுடன், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது கோட்டத்தறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரள மாநிலம் அட்டப்பாடியில் கஞ்சா விவகாரத்தில் முருகேஷ் என்பவரைத் தாக்கியதாகத் தமிழகத் தடாகம் காவல்துறையினர் மீது புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் விலா எலும்பு முறிந்த அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.#Tamilnadupic.twitter.com/lonTrUkDsl
— Indian Express Tamil (@IeTamil) July 28, 2026
தமிழகக் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, எல்லை தாண்டி வந்ததற்கான எந்தவொரு முன் தகவலையும் கேரளக் காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட முருகேஷ் அளித்த புகாரின் பேரில், அட்டப்பாடி புதூர் காவல்துறையினர் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்திய தமிழகக் காவல்துறையினர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்த முருகேஷ் மீது இதுவரை தமிழ்நாடு காவல்துறையில் எந்தவிதமான வழக்குகளும் நிலுவையில் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாநில எல்லைப் பிரச்சனையாக உருவெடுத்துள்ள இச்சம்பவம் குறித்து இரு மாநில உயர் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
