BS-6 ரக வாகனங்களுக்கான ‘ மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் ‘ ( PUCC ) செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பதற்கான வரைவு முன்மொழிவை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிய மற்றும் குறைவான மாசுவை வெளியேற்றும் வாகனங்களுக்குத் தொடர்ந்துமாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழைப் புதுப்பிப்பதில் உள்ள சிரமத்தைக் குறைப்பதே இந்த புதிய முன்மொழிவின் முக்கிய நோக்கமாகும். இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தால், 6 ஆண்டுகள் வரையிலான பழமையான BS-6 தனியார் வாகனங்களுக்கு இனி ஆண்டுதோறும் அல்லாமல், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பரிசோதனை செய்தால் போதுமானதாக இருக்கும்.
BS-6 தனியார் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான புதிய விதிகள்!
போக்குவரத்து அமைச்சகத்தின் வரைவு அறிவிப்பின்படி, வாகனத்தின் முதல் பதிவு தேதியிலிருந்து அதன் வயதைக் கணக்கிட்டு மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் தீர்மானிக்கப்படும். BS-6 ரக வணிகம் சாராத வாகனங்களுக்கு (தனியார் வாகனங்கள்) 6 ஆண்டுகள் வரையிலான வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் மூன்று ஆண்டுகளாக இருக்கும். 6 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான வாகனங்களுக்கு இது ஒரு ஆண்டாக இருக்கும். 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தனியார் வாகனங்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் புதுப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், BS-6 போக்குவரத்து வாகனங்களுக்கு (வணிக ரீதியான வாகனங்கள்) விதிகள் சற்று மாறுபடுகின்றன. 6 ஆண்டுகள் வரையிலான போக்குவரத்து வாகனங்களுக்கு இரண்டு ஆண்டுகளும், 6 முதல் 10 ஆண்டுகள் வரையிலான வாகனங்களுக்கு ஒரு ஆண்டும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வணிக வாகனங்களுக்கு ஆறு மாதங்களும் செல்லுபடியாகும் காலம் முன்மொழியப்பட்டுள்ளது.
பழைய வாகனங்களுக்குக் கடுமையான விதிகள்!
போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த முன்மொழிவு, அதிக மாசுவை வெளியேற்றும் பழைய வாகனங்களுக்கான குறுகிய கால மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் புதுப்பித்தல் நடைமுறையையே தொடர்கிறது. BS-4 ரக வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்க வேண்டியிருக்கும். BS-1, BS-2 மற்றும் BS-3 தரநிலைகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் புதுப்பிப்பதற்கான காலக்கெடு மூன்று மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதையும் இந்த வரைவு அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன் வழங்கப்பட்ட மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் விதிகள் அமலுக்கு வந்த பிறகு முதல் முறையாகப் புதுப்பிக்கப்பட்டால் மட்டுமே புதிய செல்லுபடியாகும் காலத்தின் பலனைப் பெறும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், வாகன உரிமையாளர் ஒருவர் காலாவதியாகும் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பே மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழைப் புதுப்பித்தால் பழைய சான்றிதழ் காலாவதியாகும் தேதியிலிருந்தே புதிய சான்றிதழ் செல்லுபடியாகும் எனக் கருதப்படும். ஆனால், காலாவதி தேதிக்குப் பிறகு மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டால் புதிய சான்றிதழ் புதுப்பிக்கப்பட்ட தேதியிலிருந்தே நடைமுறைக்கு வரும்.
பிஎஸ் (BS) புகை வெளியேற்ற விதிமுறைகள்!
பாரத் ஸ்டேஜ் (BS) புகை வெளியேற்ற விதிமுறைகள் என்பது வாகனங்களால் வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன்கள் மற்றும் துகள்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் கூறுகளுக்கு அதிகபட்ச வரம்புகளை நிர்ணயிக்கின்றன. இந்தத் தரநிலைகள் ஐரோப்பிய புகை வெளியேற்ற விதிமுறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் பிஎஸ்-IV விதிமுறைகள் அமலில் இருந்தன. அதன் பிறகு இந்தியா 2020ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் நேரடியாக பிஎஸ்-VI விதிமுறைகளைச் செயல்படுத்தியது.
புகை வெளியேற்றக் கட்டுப்பாடுகளை விரைவாகச் செயல்படுத்துவதற்காக இந்தியா பிஎஸ்-5 விதிமுறைகளைப் பாதியிலேயே தவிர்த்தது. பிஎஸ்-VI வாகனங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைவான மாசுபாட்டை வெளியிடுகின்றன. மேலும் அவை குறைந்த கந்தகம் கொண்ட பிஎஸ்-VI எரிபொருளில் இயங்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
