ஆளுநர் இழுத்த இழுப்புக்கு தவெக அரசு போனதன் விளைவு.. இந்த துணிச்சலை கொடுத்தது யார்? ஆளூர் ஷாநவாஸ் காட்டம் – vck aloor shanavas comments on tamil thai vazhthu controversy

தமிழ்நாட்டில் நடைபெறும் பட்டமளிப்பு விழா முதல்முறையாக வந்தே மாதரத்துடன் தொடக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக தவெக அரசு ஏதேனும் பேச வேண்டும் என்பது கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் விசிகவை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் இந்த விவகாரத்தில் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுவாக தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கம். இது சம்பந்தமாக கடந்த ஆட்சி காலத்தில் திமுகவுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்படும். ஆனாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருந்தது. இந்த நிலைப்பாட்டில் சமரசம் என்பதற்கு பேச்சே இல்லை என்பதில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது தவெக ஆட்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக 33 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருப்பது பெரும் சலசலப்பினை கிளப்பியுள்ளது. முதல்வதாக வந்தே மாதரம் இசைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் பட்டமளிப்பு விழா முதல்முறையாக வந்தே மாதரத்துடன் தொடக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதன்பின்னர் கடைசி இடத்துக்கு தமிழ்த்தாய் வாழ்த்து தள்ளப்பட்டுள்ளது. பாடலை எழுதிய மனோன்மணியம் பெயர் கொண்ட பல்கலை கழகத்தின் விழாவிலே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இது சம்பந்தமாக கடும் எதிர்ப்புகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்க ஆரம்பித்துள்ளன. ஆளுநரின் தலையீடு காரணமாகவே இந்த சம்பவம் நடத்துள்ளதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விசிகவை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இவ்விவகாரத்தில் ஆளுநரையும், தவெக அரசையும் கடுமையாக கண்டித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறுகையில், தமிழ்நாடு இன்னும் என்னென்ன கொடுமைகளை பார்க்க போகிறதோ தெரியவில்லை. இந்த விஷயத்தில் கடந்த அரசினை போல துவக்கத்திலேயே உங்களுடன் சமசரம் செய்து கொள்ள மாட்டோம் என இந்த அரசு சொல்லி இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் இழுத்த இழுப்பிற்கு இந்த அரசு சென்றதன் விளைவாக, மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழத்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. மாநில அரசுடைய சம்பளத்தை வாங்கக் கூடிய துணை வேந்தர் ஆளுநர் சொல்வதை தான் கேட்பேன் என்று சொல்வதா? இந்த துணிச்சலை யார் அவர்களுக்கு கொடுத்தது என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பெயரிலே கண்டன அறிக்கை வெளிவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் ஆளூர் ஷாநவாஸ். தவெக அமைச்சரவையில் விசிக பங்கெடுத்துள்ள நிலையில், அந்த கட்சியின் முக்கிய முகமாக திகழும் ஆளூர் ஷாநவாஸ், மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருவது குறிப்பிட்டத்தக்கது.

Source link