ஸ்ரீசோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்த  சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில், மனநலம் சார்ந்த பிரச்சினைகள், தீய சக்திகளின் பிடி ஆகியவற்றில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு, ஒரு சரணாலயமாக விளங்குகிறது.

பரசுராமரால் உருவாக்கப்பட்ட இக்கோயிலில், அன்னை ராஜ ராஜேஸ்வரியாக அம்மன் அருள்பாலிக்கிறாள். திருமாலின் சகோதரியாக அம்மன் போற்றப்படுகிறாள். மூலவர் தேவி விக்கிரகத்தின் அருகிலேயே மகாவிஷ்ணுவும் அருள்பாலிக்கிறார். இதனால் பக்தர்கள், ‘அம்மே நாராயணா.. தேவி நாராயணா’ என்று முழக்கமிட்டு வழிபடுவர்.

அதிகாலையில் வெண்ணிற ஆடை அணிந்து கலைக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதி தேவியாகவும், உச்சி வேளையில் சிவந்த ஆடை அணிந்து செல்வத்தின் அதிபதியாக விளங்கும் மகாலட்சுமியாகவும், மாலையில் நீலம் / கருப்பு நிற ஆடை அணிந்து வீரத்தின் அடையாளமாக விளங்கும் துர்கை அம்மனாகவும், சோட்டானிக்கரை பகவதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

கொல்லூரில் அருள்பாலித்ததுபோல், ஆதிசங்கரருக்கு உறுதியளித்தபடி சோட்டானிக்கரையிலும் அருள்பாலிக்கிறாள் தேவி. இதனால் இன்றும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் நடை திறக்கும் முன்பாக சோட்டானிக்கரையில் அதிகாலை பூஜை முடிந்துவிடும்.

இக்கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள கீழ்க்காவு பகுதியில் அன்னை பத்ரகாளி அருள்பாலிக்கிறாள். இங்கு பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

மாசி மகத்தன்று மதியம் 2 மணிக்கு தேவி தங்க ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள். அன்றைய தினத்தில் தேவியை வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

Source link