இந்தியாவில் ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் மொத்த வருமானம் (Gross Total Income) ஈட்டுவதாக வருமான வரித் தாக்கல் செய்த நபர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4 மடங்கு உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை மக்களவையில், காங்கிரஸைச் சேர்ந்த எம்பி முராரி லால் மீனா, இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் அதனால் உருவாகும் பொருளாதார சமத்துவமின்மை, வளர்ச்சி குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
வருமான வரிச் சட்டம், 2025 அல்லது முந்தைய வருமான வரிச் சட்டம், 1961 ஆகியவற்றின் கீழ் ‘பில்லியனர்’ (Billionaire) என்ற சொல்லுக்கு சட்டப்பூர்வ வரைவிலக்கணம் (Statutory Definition) எதுவும் இல்லை என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், கடந்த 5 மதிப்பீட்டு ஆண்டுகளில் ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் மொத்த வருமானம் அறிவித்த நபர்களின் புள்ளிவிவரங்களை அரசு பகிர்ந்துள்ளது.
5 ஆண்டுகால வருமான வரித் தாக்கல் விவரம்
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ரூ.100 கோடிக்கும் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2021-22 மதிப்பீட்டு ஆண்டு (AY 2021-22): 142 நபர்கள்
2022-23 மதிப்பீட்டு ஆண்டு (AY 2022-23): 301 நபர்கள்
2023-24 மதிப்பீட்டு ஆண்டு (AY 2023-24): 284 நபர்கள்
2024-25 மதிப்பீட்டு ஆண்டு (AY 2024-25): 415 நபர்கள்
2025-26 மதிப்பீட்டு ஆண்டு (AY 2025-26): 576 நபர்கள்
2021-22 மதிப்பீட்டு ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-26 ஆம் ஆண்டில் இத்தகைய அதிக வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 142-லிருந்து 576 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
மேலும், செல்வ வரிச் சட்டம் 1957 (Wealth-tax Act, 1957) ஏப்ரல் 1, 2016 முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், வரி செலுத்துவோரின் மொத்த சொத்து மதிப்புகள் பற்றிய தரவுகளை அரசு பராமரிப்பதில்லை என்றும், இது ஆண்டறிக்கை வருமானத்தின் அடிப்படையிலான தரவு மட்டுமே என்றும் நிதியமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் சமத்துவமின்மை தரவுகள்
வருமானக் குவிப்பு, சமத்துவமின்மை மற்றும் வேலைவாய்ப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த நிதியமைச்சகம், பல்வேறு அரசு ஆய்வுகளின் தரவுகளைக் மேற்கோள் காட்டியது:
சமத்துவமின்மை குறைவு (Gini Coefficient):
குடும்ப நுகர்வுச் செலவு கணக்கெடுப்பு 2023-24 இன் படி, வருமான சமத்துவமின்மையை அளவிடும் ‘ஜினி குணகம்’ கிராமப்புறங்களில் 0.237 ஆகவும், நகர்ப்புறங்களில் 0.284 ஆகவும் குறைந்துள்ளது (2022-23 இல் இது முறையே 0.266 மற்றும் 0.314 ஆக இருந்தது). இது கிராமப்புற-நகர்ப்புற இடைவெளி குறைவதைக் காட்டுகிறது.
வேலைவாய்ப்பு உயர்வு:
காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (PLFS) தரவுகளின்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் 2022-இல் 3.6%-லிருந்து 2025-இல் 3.1%-ஆகக் குறைந்துள்ளது.
வறுமை ஒழிப்பு:
நிதி ஆயோக்கின் ‘பரிமாண வறுமை குறியீட்டு’ அறிக்கையின்படி, 2015-16 முதல் 2019-21 வரையிலான காலத்தில் பல பரிமாண வறுமை 24.85%-லிருந்து 14.96%-ஆகக் குறைந்து, சுமார் 13.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். மற்றுமொரு ஆய்வறிக்கையின்படி, 2013-14 இல் 29.17%-ஆக இருந்த வறுமை, 2022-23 இல் 11.28%-ஆகக் குறைந்து, மொத்தம் 24.82 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பொருளாதார சமத்துவமின்மையைக் குறைக்கவும், உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) ஊக்குவிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு பட்டியலிட்டது:
*அதிக வருமானம் ஈட்டுவோருக்கான படிநிலை வரி கட்டமைப்பு (Progressive Tax Slabs) மற்றும் கூடுதல் கட்டணங்கள் (Surcharge) நடைமுறையில் உள்ளன.
*வருமான வரிச் சட்டம் 2025, பிரிவு 146 இன் கீழ் தகுதியுள்ள நிறுவனங்களில் புதிய ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான கூடுதல் செலவில் 30% வரி விலக்கு, பிரிவு 140 இன் கீழ் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான லாபம் சார்ந்த விலக்குகள் மற்றும் நிதிச் சட்டம் 2026 மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
*பிரதமர் ஆவாஸ் யோஜனா, பிஎம் கிசான் சம்மான் நிதி, பிஎம் ஜன்தன் யோஜனா, பிஎம் முத்ரா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புக்கான ‘விகசித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (கிராமீன்) சட்டம், 2025’ ஆகியவை மூலம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
