பாப்பாபட்டி கிராமம் தவறாக சித்தரிப்பு?; ‘ஜனநாயகன்’ வழக்கில் இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பாப்பாபட்டி கிராம மக்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், படக்குழுவினருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

மதுரை பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர், பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

“ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி கிராமத்தைப் பற்றிய பொய்யான மற்றும் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாப்பாபட்டி பகுதியை வன்முறை பூமியாக தவறாகச் சித்தரித்துள்ளனர். அங்குள்ள மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய காட்சிகள் பாப்பாபட்டி கிராம மக்களின் நற்பெயரையும், கண்ணியத்தையும் பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே, படத்தில் வன்முறையைத் தூண்டும் மற்றும் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும். மேலும், பாப்பாபட்டியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த படக்குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு மற்றும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

விசாரணையின் “மனுதாரர் சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளைப் பார்த்துவிட்டு வழக்காட வந்ததாகக் கூறுகிறார். சட்டவிரோதமாகப் படத்தை சமூக வலைதளங்களில் பார்த்ததே குற்றம் எனும் போது, அதன் அடிப்படையில் எவ்வாறு ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும்?” என்று மத்திய அரசு வழக்கறிஞர் மனுதாரர் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், “திரைப்படத்தில் ‘பாப்பம்பட்டி’ என்றுதான் வருகிறதே தவிர, மனுதாரர் குறிப்பிடும் ‘பாப்பாபட்டி’ எனக் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர் நீதிமன்றம், ஜனநாயகன் படத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரும் இந்த மனு தொடர்பாக இயக்குநர் ஹெச்.வினோத், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் மத்திய தணிக்கை வாரிய (சி.பி.எஃப்.சி) தலைவர் ஆகியோர் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்திவைத்தது.

Source link