சென்னை: புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுக நிர்பந்திக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார்.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. ஆனால், புதுச்சேரியில் இந்த கூட்டணி இடையே இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. புதுச்சேரியில் கூட்டணிக்கு தலைமை தாங்கள் தான் என்று காங்கிரஸ் கூறி வருவதால் முடிவு எட்டப்படாமல் உள்ளது.
கூட்டணி முடிவு இன்னமும் எட்டப்படாததால், இரு கட்சிகளின் வேட்பாளர்களும் தனித்தனியே வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கலுக்காக கடைசி நாள் மார்ச் 23 ஆகும். கூட்டணி முழுமையாக இறுதி பெற்றுவிடும், அதன் பின்னர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிடலாம் என்று இரு கட்சிகளிலும் வேட்பாளர்கள் மும்முரமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந் நிலையில், சென்னையில் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது;
புதுச்சேரியில் தற்போதுள்ள சூழல் மிகவும் முக்கியமான தருணமாக கருதுகிறேன். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கூட்டணியை திமுகதான் வழிநடத்தும் என்று மரபின்படியே நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கினோம்.
கடந்த காலங்களில் உள்ள தரவுகளின்படி, புதுச்சேரியில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், திமுக 9 தொகுதிகளிலும் போட்டியிடுவதே வழக்கம். ஆனால் இந்த முறை அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுக நிர்பந்தித்து வருகிறது.
தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக தலைமை, புதுச்சேரியில் காங்கிரஸ் தான் தலைமை என்பது எப்போதும் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. ஆகையால் எங்கள் தரப்பில் ஒரு குழுவும், அவர்கள் தரப்பில் ஒரு குழுவும் தொடர்ந்து பேசி வருகிறது. அவர்கள் தங்களுக்கு 14 தொகுதிகளும், எஞ்சிய 3 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தருவோம் என்று முன் மொழிந்துள்ளனர்.
இவ்வாறு கிரிஷ் சோடங்கர் பேட்டி அளித்தார்.
