நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்றைய தினம் நடைபெற்ற நிலையில், இந்நிகழ்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக 33 வது பட்டமளிப்பு விழா இன்றைய தினம் நடைபெற்ற நிலையில், வந்தே மாதரத்துடன் இவ்விழா தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெறும் பட்டமளிப்பு விழா முதல்முறையாக வந்தே மாதரத்துடன் துவங்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மணியம் பெயர் கொண்ட பல்கலை கழகத்திலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படாதது கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரத்துடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பட்டமளிப்பு விழா துவங்கப்பட்டு இருப்பதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது சம்பந்தமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதமாக வெடித்துள்ளது.
அதாவது கனிமொழி பகிர்ந்துள்ள பதிவில், தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில் முதன்முறையாக, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, பட்டமளிப்பு விழா வந்தே மாதரம் பாடலும் துவங்கப்பட்டுள்ளது. வாய் இருந்தால் என்ன வேண்டுமானலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இதனை கண்டித்து இப்போது ஏதாவது பேசுவாரா? என்ற கேள்வியை தன்னுடைய பதிவில் கனிமொழி முன்வைத்துள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய் வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று திமுக அரசினை விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். இந்நிலையில் அவருடைய பேச்சையே வைத்து, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது தொடர்பாக கண்டித்து முதல்வர் பேசுவாரா என்ற கேள்வியை கனிமொழி எழுப்பியுள்ளார். இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக விஜய் தரப்பில் இருந்து ஏதாவது கருத்துக்கள் வெளிவருமா என்ற எதிர்ப்பார்ப்புகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதற்கிடையில் முன்னதாக நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற 113 மாணவர்களுக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மற்ற மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு சில மாணவிகள் அந்த இடத்திலே கண்ணீருடன் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில் மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து ஆளுநரே அனைத்து மாணவர்களுக்கு பட்டம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. அதோடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வந்தே மாதரம் பாடலுடன் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்ட காரணத்தால், உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
