சென்னை: தமிழகத்திற்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீட்டை நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டன. இந்த இரு அமைப்புகளும் ஒவ்வொரு மாதமும் கூடி, காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னை குறித்து ஆலோசித்து வருகின்றன.
அந்த வகையில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் நிலவரம், காலநிலை மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
விவாதங்களுக்கு பின்னர், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீரை அணைகளில் இருந்து கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு உள்ளது.
காவிரியில் வினாடிக்கு 3500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால், 15 நாட்களில் மொத்தமாக 4.57 டிஎம்சி தண்ணீர் தமிழகம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
