மேகதாது பிரச்னையில் மத்திய அமைச்சர் பதிலால் தமிழக மக்கள் அதிர்ச்சி; சொல்கிறார் இபிஎஸ்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பதில், தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018ம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்” என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி நதிநீர் தமிழ் நாட்டில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எனது தலைமையிலான அம்மாவின் அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 2018ம் ஆண்டு பிப்.16ம் தேதி காவிரி நதிநீர் தொடர்பான போற்றத்தக்க இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்று 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில், ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது’ எனத் தெரிவித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதை மிக கடுமையாக கண்டித்தேன். தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சனையையும் அதிமுக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.

2018ம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மிகத் தெளிவாக ‘காவிரி ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரின் பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

காவிரி நதி தமிழகத்தின் ஜீவ நதி. பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்பு, உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இச்சூழ்நிலையில், மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் கூறி உள்ளார்.

Source link