நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
நிகழ்ச்சியில் கொச்சியில் உள்ள கேரளா மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் மதுசூதன குரூப் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.
பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை ஆகியோர் செய்து இருந்தனர்.
விழாவில் 37 ஆயிரத்து 877 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 12 ஆயிரத்து 932 மாணவர்களும், 24 ஆயிரத்து 945 மாணவிகளும் அடங்குவர். முன்னதாக அந்த மாணவ-மாணவிகளுடன் ஆளுநர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பட்டமளிப்பு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை ஆர்.டி.ஓ. பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
2 பதக்கங்கள் வென்ற 2 மாணவிகள்
இந்த ஆண்டு 2 மாணவிகள் தலா 2 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். வாசுதேவநல்லூர் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி லலிதா குமாரி இளநிலை பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றதற்காக தினத்தந்தி பொன்விழா பதக்கம், டாக்டர் எஸ். ராமச்சந்திரன் பதக்கம் உள்ளிட்ட 2 பதக்கங்களை பெற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்து
அதேபோல், பல்கலைக்கழக மாணவி நந்தினி இளநிலை பட்டப்படிப்பில் 2 பல்கலைக்கழகப் பதக்கங்களை பெற்றார்.
பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதால் ஏற்கனவே அறிவித்தபடி தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக தான் பாடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதை கண்டிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதன் தொடர்ச்சியாக ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் விழாவை புறக்கணித்தனர்.
