புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்கிறதா: விஜயைப் பார்த்து தனுஷூக்கும் ஆட்சி மீது ஆசையா?

இந்த சினிமா நடிகர்களுக்கு எப்போதும் ஒரு வழக்கம் உண்டு. ஒருவர் ஒன்றை செய்து வெற்றி பெற்றால் அதையே மற்றவர்களும் செய்வார்கள். ஒரு காதல் படம் வெற்றி பெற்றால் காதல் படமாக எடுத்து தள்ளுவார்கள்.

அதே போல விஜய் அரசியலில் வெற்றி பெற்றதும் நடிகர் தனுஷூக்கும் அரசியல் ஆசை தொற்றிக்கொண்டது போல. வெளிப்படையாக அவர் அரசியல் பேசாவிட்டாலும், தனது ரசிகர்களை உசுப்பேற்றும் வேலையை ஆரம்பித்துள்ளார்.

இப்படி செய்தவர்கள் முன்பு என்ன ஆனார்கள் என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். எம்ஜிஆரும் சிவாஜியும் சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் பல ஆண்டுகள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

பின்னர் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து மக்களின் அமோக ஆதரவை பெற்றார். அதைப் பார்த்து சிவாஜியும் தனிக்கட்சி ஆரம்பித்து வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவினார்.

இப்போது அதே போன்ற சூழ்நிலை தோன்றியுள்ளது. விஜய் பெற்ற வெற்றியைப் பார்த்து தனுஷ் போன்ற நடிகர்களுக்கும் முதல்வர் ஆசை வந்துவிட்டது.

விஜய்க்கு கடந்த தேர்தலில் கிடைத்த ஓட்டுகளில் பாதி தான் அவரது ரசிகர்களின் ஓட்டாக இருக்கும். மீதி பாதி, ஆட்சி மாற்றத்தையும் திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்பதற்காகவும் விழுந்த பொதுவான மக்களின் ஓட்டுகள். இந்த பொதுவான ஓட்டுகள் எப்போது வேண்டுமானாலும் மாறும்.

இந்த பொது ஓட்டுகளை ஏற்கனவே் விஜய் பெற்று விட்டார். இனிமேல் அந்த ஓட்டுகள் வேறு நடிகர்களுக்கு விழுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஏனெனில் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது விழுந்த ஓட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை, அப்போது ஆட்சியில் இருந்த திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் என்பதை மறந்து விடக்கூடாது.

எனவே, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல், விஜய்யை பார்த்து சில நடிகர்கள் இப்போது சிலிர்த்துக்கொண்டு நிற்கிறார்கள். தமிழகத்தில் இன்னும் என்னென்ன கூத்துகள் நடக்கப் போகிறதோ.

Source link