தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான திரைப்பட அறிவிப்புகளும் அப்டேட்களும் வெளியாகியுள்ளன.
‘லப்பர் பந்து’ இயக்குநருடன் தனுஷ் ‘D56’:
‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, தனது அடுத்த திரைப்படத்தில் தனுஷுடன் இணையவுள்ளார். தனுஷின் 56வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படம் குறித்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய ‘மாஸ் கமர்ஷியல் பிளாக்பஸ்டர்’ திரைப்படத்தைக் கொடுக்க உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்ட இயக்குநர், வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் இதற்கான படப்பிடிப்பு பணிகள் பூசையுடன் தொடங்கும் என்பதைத் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ‘உரியடி’ புகழ் விஜய் குமார் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரபல நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கக்கூடும் என்றும் சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
Om:Chapter 1-Udhiram:
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தற்போது நடித்துவரும் திரைப்படம் ‘ஓம்’. மலேசியாவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் இத்திரைப்படம், வரும் ‘அக்டோபர் 16’ அன்று திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மம்மூட்டி, நசீருதீன் ஷா, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மாரி செல்வராஜ்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி:
‘கர்ணன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தனுஷ் மீண்டும் இயக்குநர் மாரி செல்வராஜுடன் இணையவுள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து பிரபல எழுத்தாளர் அறிவுமதியின் எழுத்தில் உருவாகும் ‘தமிழ் முருகன்’ என்ற புதிய திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தனுஷ் தற்போது கைவசம் பல முக்கியப் படங்களை வைத்திருப்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்புகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
