நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருப்பது கடுமையான எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. இது சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், தவெக அரசு இது சம்பந்தமாக தனது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்ச்சி என்ற முறையில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடப்பட வேண்டும் என வற்புறுத்தினோம். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும், அரசியல் கட்சிகள் கருத்துக்களையும் மதிக்காமல் இன்றைய தினம் மூன்றாவதாக தான் தமிழ்த்தாய் வாழத்து பாடப்பட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. இரண்டாவதாக பல்கலை கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில், பல்கலைகழக மாணவர்களே வர முடியாத வகையில் பல்கலை கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி பட்டமளிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் பெ. சண்முகம். மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த பிரச்சனையில் அதிகாரப்பூர்வமாக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். இதுவரை முதலமைச்சரோ அல்லது அரசின் சார்பில் செய்தி குறிப்போ இந்த விஷயத்தில் நிலைப்பாட்டினை தெரிவிக்காமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இதுபோன்ற பிரச்சனைகளில் உடனுக்குடன் தமிழ்நாடு அரசு தன்னுடைய நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டுமென வற்புறுத்துகிறேன்.
ஏனென்றால் ஏற்கனவே பதவியேற்பு நிகழ்வில் வந்தே மாதரம் முதலில் அடுத்து தேசிய கீதம், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று பாடப்பட்ட போதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அதனுடைய தொடர்ச்சியாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்தப்படியாக மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதை போன்று பல்கலைகழகம் பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக வந்தே மாதரம் தேசிய பாடலா என்று விரிவான விவாதம் பலக்கட்டமாக நடந்து, அது முழுமை பெறாமலே போய் விட்டது. அந்த பாடல் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதால், அதனை பாடக்கூடாது என்பது தான் மதச்சார்பின்மை கட்சி மற்றும் இயக்கங்களின் கருத்து. ஆனால் தற்போதைய ஒன்றிய பாஜக அரசு வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் கட்டாயப்படுத்தியுள்ளது.
இது வன்மையான கண்டனத்துக்கு உரியது என கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். மேலும் வந்தே மாதரம் வேண்டுமா, வேண்டாமா என்பதை மாநிலங்களே முடிவு செய்யும். தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் வரப்போகும் சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய சட்டத்தினை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டுமென பெ. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தவெக அமைச்சரவையில் பங்கெடுத்துள்ள விசிக கட்சியை சார்ந்த ஆளூர் ஷாநவாஸ், தமிழ்த்தாய் விவகாரம் தொடர்பாக காட்டமான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். இதனையடுத்து தற்போது தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள சிபிஎம் கட்சியின் மாநில செயலாளரும் இவ்விவகாரத்தில் அரசின் மௌனம் ஏற்கத்தக்கது அல்ல என விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
