நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக கல்வித்துறை மிகவும் மோசமடைந்துள்ளதை சுட்டிக் காட்டி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். டெல்லியில் கடந்த மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டம், கடந்த ஜூலை 20 அன்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த போராட்டம் வலுவடையத் தொடங்கியது.
தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டத்தினால் செய்வதறியாத ஒன்றிய அரசு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து அவர்களின் மூன்று கோரிக்கைகளையும் ஏற்றது. அதாவது, தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது, நீட்டால் உயிர் இழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் மற்றும் அவர்களை வருங்காலங்களில் இந்த போராட்டத்தின் காரணமாக அவர்கள் மீது அரசு பழி வாங்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனக் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இந்த கோரிக்களை அரசு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த போராட்டத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரும்பப் பெற்றனர்.
ஆனால், தற்போது பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அரசு குறிவைத்துப் பழி வாங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகார போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் குற்ற பின்னணி இல்லாதவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு நோட்டிஸ் அனுப்புவதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும், சிசிடிவி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாத்காத்து வைக்க வேண்டும் எனவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
