மதுரை: ‘தமிழக அரசியலில் சீமான் தவிர்க்க முடியாத தலைவர். அவரை அவதூறாக பேசிய யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோர் மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோர் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் தரப்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, நீதிபதி விக்டோரியா கவுரி கூறியதாவது;
முதல்வர் பற்றி பேசினார் என்பதற்காகவே திமுக எம்எல்ஏ மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, சீமான் விவகாரத்தில் இதுவரை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை.
தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ சீமான் தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக தான் உள்ளார். எனவே, யூடியூபர்கள் வெளியிட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும். இன்று வழக்கு பதிந்து நாளை (ஜூலை 29) காவல்துறையினர் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி விக்டோரியா கவுரி கூறினார்.
